மாணவிகளிடம் பாலியல் பேரம் புகார்: பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
|நிர்மலாதேவி கோர்ட்டில் ஆஜராகாத நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, இந்த வழக்கில் 26-ந் தேதி (அதாவது இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகினர். ஆனால் நிர்மலா தேவி ஆஜராகாததால் தீர்ப்பு தள்ளிவைப்பட்டது. அதன்படி இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 29ந் தேதிக்கு ஒத்திவைத்து மகிளா கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.