சென்னை
ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 5 குடும்பத்தினர் வளர்த்த நாய்களை கொன்று புதைத்ததாக புகார் - தோண்டி எடுத்து போலீசார் விசாரணை
|கூவத்தூர் அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 5 குடும்பத்தினர் வளர்த்த நாய்களை கொன்று புதைத்ததாக வந்த புகாரையடுத்து, புதைக்கப்பட்ட நாய்களை தோண்டி எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் நடுக்குப்பம் மீனவ கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ளவர்கள் மீன்பிடிக்கும் தொழிலை செய்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் ஜீவா (வயது 33) என்பவர் தனக்கு சொந்தமான 8 ஏக்கர் பட்டா நிலத்தை மீனவ மக்களுக்கு சுனாமி குடியிருப்பு வீடுகள் கட்ட அரசுக்கு தானமாக வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுனாமி குடியிருப்புக்கு கொடுத்த நிலம் போக மீதம் உள்ள தனது பட்டா நிலத்துக்கு சென்று வர அங்கு குடியிருந்து வரும் 70 மீனவ குடும்பங்களை சேர்ந்த சிலர் பாதைக்கு நிலம் வழங்க சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.
மேலும், அங்கு வசிக்கும் 5 பேரின் குடும்பங்கள் மட்டும் ஜீவாவின் பட்டா நிலத்துக்கு சென்றுவர பாதை அமைக்க தங்கள் நிலங்களை கொடுக்க முடியாது என்று எதிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பாதை அமைக்க நிலம் கொடுக்க மறுத்ததால் தாங்கள் வளர்த்து வந்த நாய்களை சிலர் கொன்று நடுகுப்பம் கடற்கரை அருகே புதைத்துள்ளதாக கூவத்தூரை சேர்ந்த இளமதி (வயது 52), வேலாயுதம் (48), சேகர் (46), ஆரணி (62) உள்பட 5 பேர் புகார் செய்தனர்.
இதன் பேரில் கூவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பிராணிகள் நலத்துறை அலுவலர்களை வரவழைத்து அவர்கள் முன்னிலையில் கொன்று புதைக்கப்பட்ட நாய்களின் உறுப்புகளை தோண்டி எடுத்து வனவிலங்கு ஆஸ்பத்திரிக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக போலீசில் புகார் கொடுத்த 5 பேரின் குடும்பங்களை நடுக்குப்பம் மீனவ பஞ்சாயத்தார் சில நாட்களுக்கு முன்பு ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் 5 பேரும் புகார் மனு வழங்கியது குறிப்பிடத்தக்கது.