திண்டுக்கல்
'டெஸ்ட் பர்சேஸ்' முறையை ரத்து செய்ய வேண்டும்; வணிக வரித்துறை அலுவலகங்களில் வர்த்தகர்கள் மனு
|கடைகளில் சோதனை என்ற பெயரில் நடத்தப்படும் ‘டெஸ்ட் பர்சேஸ்’ முறையை ரத்து செய்ய வேண்டும் என்று திண்டுக்கல், பழனியில் உள்ள வணிக வரித்துறை அலுவலகங்களில் வர்த்தகர்கள் மனு கொடுத்தனர்.
கடைகளில் சோதனை என்ற பெயரில் நடத்தப்படும் 'டெஸ்ட் பர்சேஸ்' முறையை ரத்து செய்ய வேண்டும் என்று திண்டுக்கல், பழனியில் உள்ள வணிக வரித்துறை அலுவலகங்களில் வர்த்தகர்கள் மனு கொடுத்தனர்.
வணிகர்கள் மனு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், தமிழகம் முழுவதும் வணிக வரித்துறை அலுவலகங்களில் 'டெஸ்ட் பர்சேஸ்' முறையை கைவிட வேண்டும் என மனு கொடுத்தனர்.
அதன்படி மண்டல தலைவர் கிருபாகரன், செயல் தலைவர் நடராஜன், பொருளாளர் நஜிர்சேட், நகர தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட வணிகர்கள் திண்டுக்கல் வணிகவரித்துறை அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
வணிக வரித்துறை அதிகாரிகள், கடைகளில் சோதனை என்ற பெயரில் 'டெஸ்ட் பர்சேஸ்' முறையில் பொருட்களை வாங்குகின்றனர். அவ்வாறு பொருட்கள் வாங்கும்போது, பொருட்களுக்கு உரிய ரசீது தருவதில்லை என கூறி உடனடியாக ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கின்றனர்.
நாங்கள், விதிமீறல் இன்றி முறையாக வரிகள் செலுத்தி தான் பொருட்களை வாங்கி சில்லறை விற்பனை செய்கின்றோம். அனைத்து வரிகளையும் முறையாக செலுத்தி வணிகம் செய்யும் வணிகர்களை 'டெஸ்ட் பர்சேஸ்' என்ற முறையில் சோதனை செய்வது ஏற்புடையது இல்லை.
விழிப்புணர்வு
வரி ஏய்ப்பில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள், கனரக வாகன உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வணிகர்களிடமும் இந்த 'டெஸ்ட் பர்சேஸ்' சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னரே இதுபோன்ற சோதனைகளை நடத்த வேண்டும்.
மேலும் சிறு, குறு வணிகர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கவுரவ தலைவர் ஹரிஹரமுத்து தலைமையில், தலைவர் ஜே.பி.சரவணன், சரவணபொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் பழனி வணிகவரித்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் வியாபாரிகள் மனு கொடுத்தனர்.