< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
2 July 2023 9:12 PM GMT

புகார் பெட்டி

நடவடிக்கை எடுக்க வேண்டும்

குலசேகரம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாக மாறி வருகிறது. இப்பகுதியில் ஆடுகள் வளர்க்கும் சிலர் ஆடுகளை கொட்டகையில் கட்டி வளர்க்காமல் மேச்சலுக்காக விட்டு விடுகின்றனர். இதனால் அந்த ஆடுகள் கூட்டமாக பிரதான சாலையில் வருகின்றன. சாலையில் ஆடுகள் தாறுமாறாக செல்வதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. எனவே குலசேகரம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் சாலையில் உலாவும் ஆடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவசகாயம், அரசமூடு.

சீரான குடிநீர் வினியோகம் தேவை

ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. சில நேரம் பகலிலும், சில நேரங்களில் இரவிலும் வழங்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சீராக குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், குறுப்பன்விளை.

நிழற்குடை அமைக்க வேண்டும்

நாகர்கோவில் இடலாக்குடி சந்திப்பு பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால், அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பயணிகள் மழை காலங்களில் தங்கள் உடமைகளுடன் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வருகின்றனர். எனவே, பயணிகளின் நலன்கருதி நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திக், கோட்டார்.

அறிவிப்பு பலகை அமைக்கப்படுமா?

வேர்கிளம்பியில் இருந்து திருவட்டார் செல்லும் சாலையில் வெட்டுக்குழி பகுதி உள்ளது. இந்த பகுதியில் இருந்து சாலை இரண்டாக பிரிந்து ஒன்று ஆற்றூர் பகுதிக்கும், மற்றொன்று திருவட்டார் பஸ் நிலையத்திற்கும் செல்கிறது. இந்த வெட்டுக்குழி பகுதியில் எந்தவித அறிவிப்பு பலகையோ, பாதுகாப்பு குறியீடோ, மின்விளக்கோ அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் இந்த பகுதியில் வரும்போது வழி தெரியாமல் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. எனவே, மக்கள் நலன் கருதி அறிவிப்பு பலகை, பாதுகாப்பு குறியீடுகள் மற்றும் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெஸ்பின், சிராயன்குழி.

பழுதான மின்விளக்கு

குளச்சல் முகைதீன் பள்ளி தெருவின் சாலையோரத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த மின்விளக்கு எரியாததால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் பெண்கள், குழந்தைகள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, பழுதடைந்த மின்விளக்கை அகற்றிவிட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகம்மது சபீர், குளச்சல்.

வீணாகும் குடிநீர்

ஆரல்வாய்மொழியில் இருந்து நெடுமங்காடு செல்லும் சாலையில் பூதப்பாண்டி, ஆண்டித்தோப்பு சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. இதனால், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திகேயன், சீதப்பால்.

நோயாளிகள் அவதி

மாவட்டத்தில் கிராமம், நகர்ப்புறங்களிலும் அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளன. அந்த ஆஸ்பத்திரிக்கு ஏழைகளே பெரும்பாலும் சிகிச்சைக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் ஏழைகள், முதியோர்கள் சீட்டு பெற்று சிகிச்சைக்காக நீண்டநேரம் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், முதியோர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் போதிய இருக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அனந்தநாராயணன், கன்னியாகுமரி.

மேலும் செய்திகள்