திண்டுக்கல்
புகார் பெட்டி
|‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம் .
வேகத்தடை அமைக்கப்படுமா?
திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே நேருஜி நகர் ரவுண்டானா பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக வருவதால் விபத்து ஏற்படுகிறது. மேலும் நோயாளிகள், முதியவர்கள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். அந்த பகுதியில் விபத்தை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும்.
-பொதுமக்கள், நேருஜி நகர், திண்டுக்கல்.
சேதமடைந்த தரைப்பாலம்
சின்னமனூர் ஒன்றியம் சீப்பாலக்கோட்டை, 1-வது வார்டு பகுதியில் காளியம்மன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் நடந்து செல்லும் போது தரைப்பாலத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சேதமடைந்த தரைப்பாலத்தை சீர்செய்ய வேண்டும்.
-வைரமுத்து, சின்னமனூர்.
சேதமடைந்த சாலை
திண்டுக்கல் அருகே பெரியாபூர் ஊராட்சி சோனியாகாந்தி நகரில் இருந்து புலியூர் -நத்தம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெரால்டு, வக்கம்பட்டி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி ஆனந்தசாமி நகர் பகுதியில் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசுவதால் இந்த பகுதியில் குடியிருப்போர் சிரமப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
-பொதுமக்கள், செட்டிநாயக்கன்பட்டி.
சுகாதார கேடு
பழனி அருகே மானூர் தெற்கு பகுதியில் சுற்றித்திரியும் ஒரு நாயின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயத்தில் ஈக்கள் மொய்க்கின்றன. அந்த நாயால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தெருவில் விளையாடும் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நாயை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-புகழீழன், மானூர்.
தரைபாலம் தேவை
திண்டுக்கல் அங்கு விலாஸ் இறக்கம் அருகே தார் சாலையின் குறுக்கே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இதனால் சாலையை கடந்து செல்ல முடியவில்லை. எனவே அந்த பகுதியில் தரைபாலம் அமைக்க வேண்டும்.
-திருப்பதி, திண்டுக்கல்.
வரட்டாறு தூர்வாரப்படுமா?
ஆர்.கோம்பை மலையில் இருந்து மழைக்காலத்தில் ஏற்படும் நீர்வரத்து கோவிலூர் வரட்டாறு வழியாக செல்கிறது. இந்த ஆற்றில் கட்டிட கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. மேலும் முட்செடிகள் வளர்ந்து நீரோட்டம் தடைப்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-க.சண்முகம், கோவிலூர்.
குப்பை அள்ளும் வாகனம் சேதம்
தேனி ஆங்குர்பாளையம் ஊராட்சி சாமண்டிபுரத்தில் குப்பை அள்ளும் வாகனம் சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகளை சேகரிக்க சிரமப்படுகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் சேதம் அடைந்த வாகனங்களை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-பொதுமக்கள், சாமண்டிபுரம்.
நோய் பரவும் அபாயம்
உத்தமபாளையம் எல்.எப்.ரோட்டில் அமைந்துள்ள உத்தமுத்துவாய்க்கால் பாலத்தில் குப்பைகளும், இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்க வாய்க்கால் பாலத்தின் இருபுறமும் கம்பிவேலி அமைக்க வேண்டும்.
-பக்ருதீன், உத்தமபாளையம்
போக்குவரத்து நெரிசல்
கம்பத்தில் பிரதான சாலைகள் மற்றும் முக்கிய வீதிகளில் வணிக வளாகங்கள், கடைகள் முன்பு விளம்பர பேனர்களை வைக்கின்றனர். இதனால் அந்த சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்
-ராஜ்குமார், கம்பம்.
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.