< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
31 May 2023 6:45 PM GMT

புகார் பெட்டி

தூர்வார வேண்டும்

அஞ்சுகிராமம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்கு பகவதிபுரத்தில் பாலசவுந்தரி குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்த குளத்தை முறையாக பராமரிக்காததால் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்தும், பாசிகள் நிறைந்தும் காணப்படுகிறது. இதனால், குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை வேண்டும்.

-நீலகிருஷ்ணன், வடக்கு பகவதிபுரம்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

சீதப்பால் பாலத்தில் இருந்து தாழக்குடிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் புத்தானாறு கால்வாய் செல்கிறது. தற்போது இந்த கால்வாயின் கரைப்பகுதி சாலை வரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையை பாதுகாக்க கால்வாயொரத்தில் பக்கச்சுவரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.

சீரமைக்கப்படுமா?

தாழக்குடி வீரகேரளப்பன் ஏரியின் சுற்றுச்சுவர் உடைந்து படித்துறைகள் சிதைந்து சிதிலமடைந்து புதர்மண்டியும், கழிவுநீர் கலந்து சுகாதாரக்கேட்டுடன் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி சுற்றுச்சுவர், படித்துறைகளை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ப.நாகலிங்கம்பிள்ளை, தாழக்குடி.

மின்விளக்கு தேவை

ஆளூரில் இருந்து கட்டிமாங்கோடுக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை அருகாமையில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. ஆனால், இந்த சாலையோரத்தில் பல மின்கம்பங்கள் அமைக்கப்பட்டும் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் காணப்படுகிறது. இதனால், இரவு அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்தி எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஸ் கிருஷ்ணன், ஆளூர்.

விபத்து அபாயம்

செட்டியார்மடம் பஸ் நிறுத்தத்தில் இருந்து தர்மசாஸ்தா கோவிலுக்கு செல்லும் சாலையில் வாய்க்கால் உள்ளது. இதன் பக்கச்சுவர் உடைந்து காணப்படுகிறது. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக கால்வாய் கரைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயராம், செட்டியார்மடம்.

வாகன ஓட்டிகள் அவதி

துவரங்காடு மத்தியாஸ் நகர் பகுதியில் சாலையோரத்தில் ஒரு குளம் உள்ளது. குளத்தின் அருகில் ஒரு தனியார் பள்ளியும் உள்ளது. இதனால், இந்த பகுதியில் எப்போது பரபரப்பாக காணப்படும். இந்த குளத்தின் தடுப்புச்சுவர் இடிந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பள்ளிகள் திறக்கும் நிலையில் உள்ளதால் மாணவர் நலன்கருதி குளத்தின் தடுப்புச்சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இந்திரா, துவரங்காடு.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

திங்கள்சந்தையில் புதிதாக பஸ்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தின் உள்புறமும், வெளிப்புறமும் கடைகள் உள்ளன. இந்த கடை வியாபாரிகள் பொருட்கள் பயணிகளின் நடைபாதை, படிக்கட்டுகளை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள், மாணவ-மாணவிகள், முதியார்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மகேஸ்வரி, திங்கள்சந்தை.

மேலும் செய்திகள்