கன்னியாகுமரி
புகார் பெட்டி
|புகார் பெட்டி
வீணாகும் குடிநீர்
இரணியல் காமராஜர் நகரில் பண்ணிக்கோடு தெரு உள்ளது. இந்த தெருவில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் பாய்கிறது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்ரமணி, இரணியல்.
இருக்கைகள் சீரமைக்கப்படுமா?
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ராணிதோட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனையின் முன்பு பஸ்நிறுத்தமும், பயணிகள் நிழற்குடையும் அமைக்கப்பட்டுள்ளது. நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் வாகனம் மோதி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அங்கு வரும் பயணிகள் அமர்வதற்கு முடியாமல் பஸ் வரும் வரை நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் நலன்கருதி நிழற்குடையில் சேதமடைந்த இருக்கைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-எஸ்.பிரகாஷ், ராணித்தோட்டம்.
சேதமடைந்த மின்கம்பம்
நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பேயன்குழியில் பனங்காடு குளம் இந்த குளத்தின் அருகில் உள்ள சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகளில் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோ.சுபின் ஜி, பேயன்குழி, கன்னியாகுமரி.
ஓடையை சீரமைக்க வேண்டும்
பூதப்பாண்டி வடக்குத்தெருவில் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகில் இருந்து சுடுகாடு வரை செல்லும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடை சேதமடைந்து காணப்படுகிறது. ேமலும், முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் வடிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, ஓடையை சீரமைத்து கழிவுகளை அகற்றி தண்ணீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாரதி, பூதப்பாண்டி.
நடவடிக்கை தேவை
இறச்சகுளத்தில் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் பழைய கட்டிடம் சேதமடைந்ததால், அதை இடித்து விட்டு புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல மாதங்களாகியும் அந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. எனவே, உற்பத்தியாளர்கள் சிரமத்தை கருதி புதிய கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காளியப்பன், இறச்சகுளம்.
வாகன ஓட்டிகள் அவதி
காப்புக்காட்டில் இருந்து சடையன்குழி செல்லும் சாலையில் ஆடுதூக்கி பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையில் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. தற்போது, அந்த இடத்தில் செடிகள் வளர்ந்து புதராக காட்சி அளிக்கிறது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைப்பதுடன், அங்கு வளர்ந்துள்ள செடிகளையும் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினு, குன்னத்தூர்.
---