கன்னியாகுமரி
புகார் பெட்டி
|புகார் பெட்டி
தூர்வார வேண்டும்
கொட்டாரத்தில் கவர்குளம் உள்ளது. இந்த குளம் முழுவதும் தாமரைகொடிகள் வளர்ந்து காணப்படுவதால் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், அருகில் உள்ள கிணறுகளில் உள்ள தண்ணீரும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, தாமரைகொடிகளை அகற்றி குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.
எரியாத மின்விளக்கு
நாகர்கோவில் மேலராமன்புதூரில் திருக்குடும்ப ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் அருகில் உள்ள தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பொருத்தப்பட்டுள்ள விளக்கு பழுதடைந்து பல வாரங்களாக எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு அந்த தெரு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண்குமார், மேலராமன்புதூர்.
சுகாதார சீர்கேடு
குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்டத்தில் போலீஸ் நிலையம் அருகே அட்டக்குளத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் சிலர் ஓட்டல்களின் கழிவுகள், குப்பைகளை கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஓட்டல் கழிவுகளை அகற்றுவதுடன், அங்கு கழிவுகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், மார்த்தாண்டம்.
போக்குவரத்து நெருக்கடி
திருப்பதிசாரத்தில் இருந்து வீரநாராயணமங்கலம் செல்லும் சாலையின் கிழக்கு பகுதியில் கால்வாய் ஓடுகிறது. இந்த கால்வாயில் கடந்த சில நாட்களுக்கு முன் செடி, கொடிகள், கழிவுகள் அகற்றப்பட்டு சாலையோரத்தில் கொட்டப்பட்டது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன், அந்த வழியாக வாகன போக்குவரத்துக்கும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. மேலும், ஆக்கிரமிப்புகளால் கால்வாய் சுருங்கி காணப்படுகிறது. எனவே, கழிவுகளை அகற்றுவதுடன், மறுஅளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை விரிவாக்கம் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகலிங்கம் பிள்ளை, தாழக்குடி.
சீரமைக்கப்படுமா?
கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் அரசு நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நூலகத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. தினசரி பத்திரிகைகளும் வருகின்றன. ஆனால், இந்த கட்டிடம் மிகவும் சேதமடைந்து கான்கிரீட் பூச்சுகளும் பெயர்ந்து விழுந்த வண்ணம் காணப்படுகிறது. புத்தகங்கள் வைக்கக்கூட போதிய இடவசதி இல்லாத நிலையில் காணப்படுகிறது. பல புத்தகங்கள் தரையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, வாசகர்கள் நலன் கருதி சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாராயணன், கொட்டாரம்.
விபத்து அபாயம்
வடசேரியில் பஸ்நிலையம் உள்ளது. இங்கு இருந்து குமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும், வெளி மாவட்டம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றது. இதனால், பஸ்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பஸ்நிலைய கட்டிட பராமரிப்பு பணி நடந்தது. அதில் உள்ள கழிவுகள் அகற்றப்படாமல் நிலையத்தில் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கட்டிட கழிவுகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.ஜோணி, நாகர்கோவில்.
மாணவர்கள் அவதி
மார்த்தாண்டத்தில் இருந்து மேல்புறம் செல்லும் சாலையில் வடக்கு தெரு உள்ளது. இந்த பகுதியில் பள்ளி-கல்லூரிகள் உள்ளன. இந்த சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தன. ஆனால், சாலை முறையாக சீரமைக்காமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மாணவர்கள் பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். எனவே, சாலையை முறையாக சீரமைத்தும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெஸ்பின், சிராயன்குழி.