கன்னியாகுமரி
புகார் பெட்டி
|புகார் பெட்டி
விரிவாக்கம் செய்யப்படுமா?
வெள்ளிச்சந்தை ஊராட்சிக்கு உட்பட்ட சேனாப்பள்ளி திருப்பத்தில் இருந்து வேம்பனூருக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் இருபக்கமும் 200 மீட்டர் தூரம் பாசன கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை மிகவும் குறுகியதாக காணப்படுவதால் வாகன போக்கு வரத்துக்கு நெருக்கடி ஏற்படுவதுடன் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.தேவதாஸ், ராமநாதபுரம்.
சீரான மின் வினியோகம் தேவை
மயிலாடி மின்வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட மருங்கூர், தோப்பூர், ராமனாதிச்சன்புதூர், ராஜாவூர் உள்ளிட்ட ஊர்களில் தினமும் 10 முறைக்கு குறையாமல் மின்தடை ஏற்படுகிறது. பின்னர், மீண்டும் மின்சாரம் வினியோகம் செய்யும்போது குறைந்த அழுத்தத்தில் வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு பிறகுதான் கவனிக்கப்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சீரான முறையில் தடையில்லா மின்வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லியோன், மருங்கூர்.
வாகன ஓட்டிகள் அவதி
நித்திரவிளை செல்லும் பிரதான சாலையில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இந்த பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், மழை நேரங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஸ், சமத்துவபுரம்.
நடவடிக்கை தேவை
ஈத்தாமொழியில் இருந்து நாகர்கோவிலுக்கு 38 'என்' என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சின் மேற்கூரை சேதமடைந்து உள்ளதால் மழை நேரங்களில் மழைநீர் ஒழுகுகிறது. இதனால், பயணிகள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பஸ்சில் சேதமடைந்த மேற்கூரையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-ஜவகர், பறக்கை சந்திப்பு.
எரியாத மின்விளக்குகள்
குறும்பனையில் பஸ்நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் பயணிகள் வசதிக்காக உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. தற்போது அவை பழுதடைந்து பல மாதங்களாக எரியாமல் காணப்படுகிறது. இதனால், பஸ்நிலையம் இரவு நேரம் இருள் சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது. எனவே, பயணிகள் நலன் கருதி பழுதடைந்த மின்விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகள் பொருத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சகாயபாபு, குறும்பனை.
விபத்து அபாயம்
நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கோட்டார் போலீஸ் நிலையம் பகுதியில் இருந்து ஒரு சாலை பிரிந்து ஒழுகினசேரி செல்கிறது. இந்த சாலையின் நடுப்பகுதி சேதமடைந்து மூன்று பள்ளங்கள் காணப்படுகிறது. எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரசேகரன், சந்தையடி.