< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
27 April 2023 12:15 AM IST

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நடவடிக்கை எடுப்பார்களா?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் இயங்கும் சில வாகனங்கள் மிகுந்த சத்தத்துடன் அதிக ஒலி எழுப்பியபடி சாலையில் பயணிக்கின்றன. இதனால் சாலையில் பயணிக்கும் பிற வாகனஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதுடன் விபத்து அபாயம் உள்ளது. எனவே இதற்கு தீர்வுகாண சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகழ், காரைக்குடி, சிவகங்கை.

நாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் நாய்கள் அதிக அளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜபாண்டியன், சிவகங்கை.

சேதமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு உட்பட்ட சில பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமம் அடைகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே நகரின் சேதமடைந்த சாலைகளை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். வெற்றிவேல், மானாமதுரை.

கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு

சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக கண்மாய்கள் திகழ்ந்து வருகிறது. இது பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுவதுடன், விவசாயம் போன்ற தொழில் வளங்களுக்கும் தேவைப்படுகிறது. இந்தநிலையில் சில கண்மாய்களில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கண்மாயில் தண்ணீரை சேமிப்பதற்கு முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே கண்மாயில் வளர்ந்துள்ள கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருமாள், சிவகங்கை.

சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சிலர் குப்பைகளை சாலையில் ஆங்காங்கே வீசி செல்கின்றனர். இதனால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், காற்றில் பறந்து வாகனஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே குப்பைகளை சாலையில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலாஜி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம்.

பஸ் இயக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் கீழடி பாரம்பரியம் மற்றும் வரலாற்றை பறைசாற்றும் முக்கிய பகுதியாக திகழ்ந்து வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்நகருக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள், மாணவ- மாணவிகள் கீழடியின் தொன்மையை அறிய முடியும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இப்பகுதிக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், சிவகங்கை.

வாகனஓட்டிகள் சிரமம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஸ் நிலையம் பகுதியில் சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையில் வாகனங்கள் நிறத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுப்பிரமணி, பரமக்குடி, ராமநாதபுரம்.

பராமரிப்பற்ற கழிப்பறை

ராமநாதபுரம் நகரில் அரண்மனை அருகில் உள்ள யானைக்கல் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி பொது கழிப்பறை பராமரிப்பு இல்லாமல் உள்ளது.மேலும் தண்ணீர் வசதியும் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

விபத்து அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிழக்குகடற்கரை சாலை பழங்கோட்டை நான்குமுனை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் ரவுண்டானா மற்றும் சிக்னல் விளக்குகள் அமைத்து விபத்து ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

அகமதுகான், திருப்பாலைக்குடி, ராமநாதபுரம்.

அடிக்கடி மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் ஆத்மநாதசாமி முதல் வடக்கு தெருவில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. கோடை காலமாக இருப்பதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் சீரான மின்வினியோகம் அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுவாமிநாதன், பட்டணம்காத்தான், ராமநாதபுரம்

Related Tags :
மேலும் செய்திகள்