கன்னியாகுமரி
புகார் பெட்டி
|புகார் பெட்டி
பொதுமக்கள் அவதி
மாங்கோடு ஊராட்சியில் ஐந்துளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து குளப்பாறை வழியாக காஞ்சிகோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படும் அந்த சாலையில் அவசர தேவைக்கு ஆம்புலன்சு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அனீஷ் கனகராஜ், ஐந்துளி.
வழிகாட்டி பலகை தேவை
குளச்சல் நகராட்சியில் பள்ளி முக்கு சந்திப்பு உள்ளது. எப்போதும் வாகன போக்குவரத்துடன் இந்த சந்திப்பு பகுதி பரபரப்பாக காணப்படும். ஆனால், இந்த சந்திப்பு பகுதியில் வழிகாட்டி பலகை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பள்ளி முக்கு சந்திப்பு அருகில் வழிகாட்டி பலகை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகம்மது சபிர், குளச்சல்.
விபத்து அபாயம்
திருவிதாங்கோட்டில் இருந்து கோழிப்போர்விளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் அமராவதி குளத்தின் அருகில் சாலையோரம் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு அதன் மீது 3 கான்கிரீட் சிலாப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதில் ஒரு சிலாப்பு சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சிலாப்புகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினு, குன்னத்தூர்.
போதிய இருக்கை வசதி தேவை
வடசேரி பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துகழக பஸ்கள் நிற்கும் நிறுத்தம் உள்ளது. அந்த பஸ்களில் செல்வதற்காக நாகர்கோவிலின் பல பகுதிகளில் இருந்தும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பயணிகள் பஸ்சிற்காக காத்திருப்பதற்காக அங்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், போதிய இருக்கை வசதிகள் இல்லை. பல இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், பெரும்பாலான பயணிகள் பல மணிநேரம் நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, போதிய இருக்கை வசதி ஏற்படுத்திதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்றணி சதீஷ், ஆசாரிபள்ளம்.
சாலை சீரமைக்கப்படுமா?
நாகர்கோவில் கோர்ட்டின் எதிர்புறத்தில் இருந்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலைக்கு செல்லும் குறுக்குச்சாலை ஒன்று செல்கிறது. இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் செல்வது வழக்கம். இந்த சாலை கடந்த 4 ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை போர்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
-கென்னடி ரொட்ரிகோ, கோட்டார்.