கன்னியாகுமரி
புகார் பெட்டி
|புகார் பெட்டி
சீரமைக்கப்பட்டது
ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடை உள்ளது. இந்த பகுதியில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் ேதாண்டி சீரமைக்கப்பட்டது. ஆனால், பள்ளம் சரியாக மூடப்படாமல் காணப்பட்டது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி 'தினத்தந்தி' புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பாதுகாப்பு குறியீடு தேவை
நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் தக்கலை அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு சிகிச்சைக்காக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் பொதுமக்கள் இந்த தேசிய நெடுஞ்சாலையை கடந்து மருத்துவமனைக்கு செல்வதற்குள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள், நோயாளிகள் நலன்கருதி அந்த பகுதியில் சாலையை கடந்து செல்வதற்கு வசதியாக பாதுகாப்பு குறியீடோ அல்லது சுரங்கப்பாதையோ அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேந்திரன், தக்கலை.
தார் சாலை அமைக்க வேண்டும்
தோவாளைக்கும் வெள்ளமடத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்து கோழிகோட்டுபொத்தைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.ஆன்றணி சதீஷ், ஆசாரிபள்ளம்.
வீணாகும் குடிநீர்
வெள்ளிச்சந்தை முதல் நிலை ஊராட்சிக்கு உட்பட்ட சரல் மற்றும் சேனாப்பள்ளி பகுதியில் சாலையோரம் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் வீணாக சாலையோரத்தில் பாய்ந்து தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், ராமநாதபுரம், குருந்தன்கோடு.
நடைபாதை அமைக்க வேண்டும்
குழித்துறை சந்திப்பில் இருந்து மேல்புறம் செல்லும் சாலையில் விளவங்கோடு தாசில்தார் அலுவலகம், குழித்துறை கோர்ட்டு உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைத்து நடைமேடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினு, குன்னத்தூர்.
நிரந்தர தீர்வு காணப்படுமா?
மார்த்தாண்டத்தில் இருந்து ஐரேனிபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மூன்றாம் பிலாவிளை பகுதியில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. மேலும், சாலையும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அடிக்கடி ஏற்பட்டும் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து சாலையையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரஸ்வதி, மூன்றாம் பிலாவிளை, காப்புக்காடு.