கன்னியாகுமரி
புகார் பெட்டி
|புகார் பெட்டி
மாற்றப்பட்டது
எள்ளுவிளை பகுதியில் சாலையோரம் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
ஆபத்தான சுவிட்சு பெட்டி
பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட திட்டுவிளை பெரிய தெருவில் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுவிட்சு பெட்டி தாழ்வாக காணப்படுவதுடன் சேதமடைந்து திறந்தே கிடக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சுவிட்சு பெட்டியை அகற்றி விட்டு புதிய பெட்டியை உயரமான இடத்தில் பொருத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சேக் மைதீன், திட்டுவிளை.
இதையும் கவனியுங்க...
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கோட்டார் பகுதியில் வியாபார நிறுவனங்கள் அதிகமாக உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு காய்கறிகள் வாங்குவதற்காக கூழக்கடை பஜார் என்ற மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியாக உயர்த்தப்பட்டு ஆண்டுகள் ஆகியும் இந்த மார்க்கெட்டின் முகப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை மாற்றப்படாமல் நாகர்கோவில் நகராட்சி என்று உள்ளது. எனவே, பழைய பெயர் பலகையை அகற்றி விட்டு நாகர்கோவில் மாநகராட்சி கூழக்கடை பஜார் என புதிய பெயர் பலகை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.
வீணாகும் குடிநீர்
ஈத்தாமொழியில் இருந்து ராஜாக்கமங்கலத்துக்கு செல்லும் மேற்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் ராஜாக்கமங்கலம் துறை செல்லும் பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்துக்காக சாலையின் கீழ் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் பாய்கிறது. மேலும், சாலையில் பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்து வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுப்பதுடன், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.நாகராஜன், ராஜாக்கமங்கலம்.
பயன்பாட்டுக்கு வருமா?
காட்டாத்துறை ஊராட்சிக்குட்பட்ட சுவாமியார்மடம் பகுதியில் காமராஜர் படிப்பகம் அமைந்துள்ளது. இந்த படிப்பகம் முறையாக பராமரிக்கப்படாமல் செடி, புற்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் படிப்பகத்தை பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, செடிகளை அகற்றி படிப்பகத்துக்கு வர்ணம் பூசி மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வசந்தகுமார், சுவாமியார்மடம்.