தென்காசி
புகார் பெட்டி
|புகார் பெட்டி
கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகள்
ெதன்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே செந்தட்டியாபுரம் புதூரில் இருந்து அருகன்குளம் வழியாக தென்மலை வரையிலும் புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக பழைய சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டினர். பின்னர் புதிய சாலை அமைக்கும் பணிகளை நிறைவேற்றாமல் பணிகளை பல மாதங்களாக கிடப்பில் போட்டனர். இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-ஜெகதீசன், அருகன்குளம்.
மாற்றுப்பாதை அமைக்க வேண்டும்
சிவகிரி அருகே ராயகிரி- சத்திரம் சாலையில் கணபதி ஆற்றுப்பகுதியில் புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பாலத்தின் அருகில் வாகனங்கள் கடந்து செல்லும் வகையில், தற்காலிக மாற்றுப்பாதை அமைக்கப்படவில்லை. இதனால் சத்திரம், வடக்கு சத்திரம், விசுவநாதபேரி உள்ளிட்ட பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. எனவே கணபதி ஆற்றுப்பகுதியில் புதிய பாலம் அமைக்கும் இடத்தின் அருகில் தற்காலிக மாற்றுப்பாதை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-சமுத்திரகனி, ராயகிரி.
சாலையின் நடுவில் ராட்சத பள்ளம்
கடையம் மெயின் பஜாரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அங்கு சாலையின் நடுவில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே குழாய் உடைப்பை சரி செய்வதுடன் சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-திருக்குமரன், கடையம்.
பஸ் வசதி அவசியம்
வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பகுதியில் இருந்து பெரியசாமியாபுரம், பட்டாடைகட்டி, தட்டான்குளம், வென்றிலிங்கபுரம் நடுவக்குறிச்சி வழியாக சங்கரன்கோவிலுக்கு பல ஆண்டுகளாக பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் வாடகை வாகனங்களில் சங்கரன்கோவிலுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே அந்த வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-கணேசன், கீழக்கலங்கல்.
ஊர் பெயர் பலகையை மறைத்த சுவரொட்டி
கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து ரஹ்மத்நகர் பகுதியில் சாலையோரம் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த பலகையின் இருபுறமும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் வெளியூர் பயணிகள் ஊர் பெயர் தெரியாமல் சிரமப்படுகின்றனர். எனவே ஊர் பெயர் பலகையை மறைக்கும் சுவரொட்டிகளை அகற்றுவதுடன், அங்கு மீண்டும் சுவரொட்டி ஒட்டாதவாறு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-அம்ஜத், முதலியார்பட்டி.