< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
20 Feb 2023 12:15 AM IST

புகார் பெட்டி

சீரமைக்கப்பட்டது

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட கடைதெருவில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கபட்டிருந்தன. கடந்த மழைகாலத்தில் அலங்கார தரைக்கற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்தது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பகுதியில் அலங்கார தரைக்கற்களை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-அபுதாய்ரு, குளச்சல்.

வீணாகும் குடிநீர்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணன்கோவில் யாதவர் மேற்கு தெருவில் ஓம் சக்தி கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் அமைக்கப்பட்டுள்ள பொது குழாயின் நல்லி உடைந்து குடிநீர் வீணாக தெருவில் பாய்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நல்லியை அகற்றி விட்டு புதிய நல்லியை அமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

-க.அருணாசலம், கிருஷ்ணன்கோவில்.

மின்கம்பம் மாற்றப்படுமா?

பீச்ரோடு சாலையில் இருந்து ஆயுதப்படை முகாம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் திருப்பத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் ஒரு வாகனம் மோதியதில் சேதமடைந்து வளைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மின்கம்பம் சரிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்து மின்கம்பத்தை மாற்றுவார்களா?

-ராஜன், வேதநகர்.

பயணிகள் அவதி

புத்தேரியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த நிறுத்தத்தில் நன்று அந்த வழியாக செல்லும் அரசு பஸ்களில் செல்வது வழக்கம். சமீபகாலகமாக அரசு பஸ்கள் குறிப்பாக பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ் புத்தேரி நிறுத்தத்தில் நிற்பது இல்லை. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நிறுத்தத்தில் சரியாக பஸ்கள் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், மேலபுத்தேரி.

குளத்தை தூர்வார வேண்டும்

தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாச்சியார்குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. அந்த நிலங்கள் இந்த குளத்தின் மூலம் பாசன வசதி பெற்று வந்தது. தற்போது இந்த குளத்தை முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் குளத்தில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, செடி, கொடிகளை அகற்றி குளத்தை துர்வாரி தண்ணீரை தேக்கி வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மான்சி நபினா, தாழக்குடி.

விபத்து தடுப்புச்சுவர் தேவை

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நாடான் குளத்தில் இருந்து மாட்டுகட்டிவிளை வழியாக பூவார் பாசன கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் பக்கச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. மேலும், மாடுகட்டிவிளை பகுதியில் மதகு பாலத்தின் கீழ் கால்வாய் தாழ்ந்து செல்கிறது. சாலையோரத்தில் விபத்து தடுப்புச்சுவரும் அமைக்கப்படவில்ைல. இதனால், அந்த பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் கால்வாய்க்குள் பாய்ந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி பாலம் பகுதியில் விபத்து தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகரன், சந்தையடி.

சேதமடைந்த மின்கம்பம்

வெட்டூர்ணிமடம் பகுதியில் ஜோதி தெரு மேற்கு பகுதியில் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் சாய்ந்து விழாமல் இருக்க இணைக்கப்படும் ஸ்டே கம்பி அமைக்கப்படாமல் உள்ளது. மேலும், மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்து மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை முறையாக நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருள்தாஸ், ஜோதி தெரு.

மேலும் செய்திகள்