< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
23 Nov 2022 6:45 PM GMT

புகார் பெட்டி

மரக்கிளை அகற்றப்பட்டது

கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட இனயம் பகுதியில் ஓடக்கரையில் இருந்து ரேஷன்கடை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் புளிமரம் ஒன்று வாகன போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்து காணப்பட்டது. இதனால் ரேஷன்கடைக்கு பொருட்கள் கொண்டு வரும் லாரிகள் மற்றும் பள்ளி வாகனங்களின் டிரைவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுபற்றிய செய்தி தினந்தந்தி புகார் பெட்டியில் வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இடையூறாக காணப்பட்ட மரக்கிளையை வெட்டி அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

தெரு நாய்கள் தொல்லை

மணவாளக்குறிச்சி பகுதியில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. அவை வாகனங்களில் செல்வோரை விரட்டுவதும், கடிக்க முயற்சித்து வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோ.ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.

விபத்து அபாயம்

சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவாசபுரத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன்புறம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி சிலர் கட்டிட பணிக்காக கற்களை கொட்டி உள்ளனர். இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையையொட்டி கொட்டப்பட்டுள்ள கற்களை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-த.விஜேஷ், விசுவாசபுரம்.

மரத்தை அகற்ற வேண்டும்

ஆரல்வாய்மொழியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வளாகத்தில் ஒரு பெரிய மரம் பட்டுப்போன நிலையில் காணப்படுகிறது. இந்த மரம் எப்போது வேண்டுமானாலும் காற்றினால் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த அலுவலகத்துக்கு செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, பட்டுப்போன நிலையில் நிற்கும் மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.

மின்கம்பத்தை அகற்ற வேண்டும்

நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள ஆசாரி தெருவில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையின் நடுவே மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், குப்பை தேங்கி நிற்பதால் கழிவுநீர் வடிந்தோட வழியில்லாமல் காணப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, கழிவுநீர் ஓடையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மிர்சா அகமது, நாகர்கோவில்.

அறிவிப்பு பலகை தேவை

சுசீந்திரத்தில் பழையாற்றின் குறுக்கே பழைய பாலம் மற்றும் புதிய பாலம் என 2 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாலங்களும் ஒருவழிப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுதொடர்பாக அந்த பாலம் பகுதியில் எந்த அறிவிப்பு பலகைகளும் வைக்கப்படாமல் உள்ளது. இதனால், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இருபாலம் பகுதியிலும் அறிவிப்பு பலகைகள் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பெ.தங்கத்துரை, வழுக்கம்பாறை.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலயத்திருவிழா தொடங்கி உள்ளது. இதையொட்டி கோட்டார் ஆயுர்வேத மருத்துக்கல்லூரி அருகில் இருந்து செட்டிகுளம் வரை செல்லும் சாலையின் இருபுறமும் திருவிழாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதி வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-ராசிக், டி.வி.டி.காலனி.

மேலும் செய்திகள்