< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
12 Oct 2022 6:45 PM GMT

புகார் பெட்டி

குளத்தை தூர்வார வேண்டும்

கட்டிமாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட மேலகட்டிமாங்கோடு பகுதியில் மகாதேவர் குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது முறையாக பராமரிக்காததால் குளம் முழுவதும் பாசி படர்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இ.முருகன், மேலகட்டிமாங்கோடு.

சீரமைக்க வேண்டும்

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் அண்ணா பஸ்நிலையம் உள்ளது.இந்த நிலையத்தில் இருந்து பஸ்கள் மீனாட்சிபுரம் வழியாக வெளியே செல்லும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், நிலையத்தில் இருந்து வரும் பஸ்கள் வேகமாக வந்து திரும்பும்போது பிற வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த வேகத்தடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராசிக் ராஜ், கோட்டார்.

சேதமடைந்த நிழற்குடை

பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளியாகாலை பகுதியில் பஸ்நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தின் அருகில் பயணிகள் நிழற்குடை அமைந்துள்ளது. இந்த நிழற்குடை சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்த வண்ணம் காணப்படுகிறது. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் அச்சத்துடனேயே நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆனந்த், வெள்ளியாகாலை.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக பொருட்கள் வைக்கும் பாதுகாப்பு அறை வசதி இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் கன்னியாகுமரியில் பாதுகாப்பு அறை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பார்களா?

-பி.சிவராஜன், கன்னியாகுமரி.

கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட மாதவபுரத்தில் இருந்து வாகவிளைக்கு செல்லும் சாலைஉள்ளது. இந்த சாலையில் சாமிநாதபுரம் தெருவில் உள்ள வீடுகளின் கழிவுநீர்கள் குழாய்கள் மூலம் வெளியேற்றப்படுவதால் நடுச்சாலையில் கழிவுநீர்தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. மேலும், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையில் கழிவுநீர் தேங்காத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.ராம்தாஸ், சந்தையடி.

நடவடிக்கை எடுப்பார்களா?

தோவாளை பெரிய குளத்தின் மறுகால் பாயும் இடத்தின் அருகே இருந்த தடுப்பு சுவர் கடந்த மழை காலத்தில் இடிந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து அங்கு தற்காலிகமாக மணல் மூட்டை அடுக்கி வைக்கப்பட்டு உடைப்பு சரிசெய்யப்பட்டது. ஆனால், தற்போது அந்த சாக்கு மூடைகள் சேதமடைந்து மணல் வெளியே கொட்டி வருகிறது. மழைகாலம் தொடங்க இருப்பதால் மீண்டும் அந்த பகுதியில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை ஆய்வு செய்து போா்க்கால அடிப்படையில் அந்த பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.

-நீ.மு.தாணு, ஆரல்வாய்மொழி.

மேலும் செய்திகள்