< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
27 Sep 2022 6:45 PM GMT

புகார் பெட்டி

செடிகள் அகற்றப்பட்டது

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமவர்மபுரம் பழைய வங்கி காலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் குப்பைகளை சேகரிக்க பணியாளர்கள் யாரும் வருவதில்லை. மேலும், சாலையோரம் செடிகொடிகள் வளர்ந்து புதர்காடாக காணப்பட்டது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரம் இருந்த செடிகளை அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திைய வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

தடுப்பூச்சுவர் அமைக்கப்படுமா?

அகஸ்தீஸ்வரம் காலேஜ்ரோட்டில் வடுகன்பற்று என்ற இடத்தில் ஒரு சாலை பிரிந்து சுவாமிதோப்பு செல்கிறது. இந்த சாலையில் கவர் குளம் அருகில் 2 வளைவுகள் உள்ளது. அந்த வளைவுகளில் சாலையோரம் பெரும் பள்ளங்களும், பனைமரங்களும் காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதியில் விபத்து தடுப்பு சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமதாஸ், சந்தையடி.

குளம் தூர்வாரப்படுமா?

தக்கலை அருகே வேப்பங்கோணம் கிராமத்தில் வேப்பங்குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதியில் உள்ள மக்கள் குளிப்பதற்கும், விவசாயம் உள்ளிட்ட பல தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது, குளத்தை முறையாக பராமரிக்காததால் செடிகள் வளர்ந்து வயல்வெளி போல் காட்சி அளிக்கிறது. இதானல், குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரஸ்வதி, வேப்பங்கோணம்.

சீரான பஸ்வசதி தேவை

மணகுடி-நாகர்கோவில், பள்ளம்-நாகர்கோவில் வழித்தடத்தில் அதிகாலை 4.45 மற்றும் 5.15 மணிக்கு 2 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது, இந்த பஸ்கள் சீரான முறையில் இயக்கப்படுவதில்லை. இதனால், அதிகாலையில் வேலைக்கு செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சீரான முறையில் பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துசெல்வம், பறக்கை.

சீரமைக்க வேண்டும்

நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் இருந்து வடசேரிக்கு திரும்பும் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. ரவுண்டானா பகுதியில் சாலையோரத்தில் பொதுமக்கள் நடைபாதை அருகில் கழிவுநீர் ஓடையின் மீது போடப்பட்டிருந்த சிலாப்புகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த பகுதியில் நடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த பகுதியில் புதிய சிலாப்புகளை அமைத்து விபத்தை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்றோ டெகோ சிங்ராஜன், நாகர்கோவில்.

விபத்து அபாயம்

வேர்கிளம்பியில் இருந்து சாமியார்மடம் சாலையில் செட்டிச்சார்விளை உள்ளது. இந்த பகுதியில் சாலையின் குறுக்கே உயரத்தில் கேபிள் ஒயர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒயர்கள் பல நாட்கள் அறுந்து சாலையில் குறுக்காக கிடக்கிறது. இதனால், இருச்சரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையில் குறுக்கே கிடக்கும் கேபிள் ஒயரை சீரமைக்க நம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெஸ்பின், சிராயன்குழி.

மேலும் செய்திகள்