< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
22 Aug 2022 5:28 PM GMT

புகார் பெட்டி

பள்ளம் மூடப்பட்டது

அழகியமண்டபம்-குலசேகரம் சாலையில் ஆற்றூர் புளியமூடு சந்திப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் கடந்த மாதம் பெய்த மழையில் சாலையோரம் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்து வந்தது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரங்களில் இருந்த பள்ளத்தை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

நடைபாலம் தேவை

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக சந்திப்பில் இருந்து வடசேரி செல்லும் சாலை வாகன போக்குவரத்துடன் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் உள்ள பள்ளிகளுக்கு பஸ்சில் வரும் மாணவ-மாணவிகள் கலெக்டர் அலுவலக சந்திப்பில் இருந்து நடந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் மாணவிகள் சந்திப்பு பகுதியில் இருந்து மறுபுறம் சாலையை கடக்க பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, கலெக்டர் சந்திப்பில் சாலையை கடக்க நடைபாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராசிக், டி.வி.டி.காலனி.

சேதமடைந்த குளம்

நெய்யூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு தெருவில் அம்மாள்குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமலும், குளத்தை சுற்றி புதர் மண்டியும் காணப்படுகிறது. ேமலும், படித்துறையும் சேதமடைந்துள்ளது. இதனால், தற்போது குளத்தை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி, படித்துறையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயராஜ், நெய்யூர்.

குப்பைகள் அகற்றப்படுமா?

அகஸ்தீஸ்வரத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்ைத சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் முன்பு உள்ள சாலையின் எதிரே சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அந்த குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றி, அங்கு குப்பைகளை கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.ராமதாஸ், சந்தையடி.

குளத்தை தூர்வார வேண்டும்

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் இருந்து ஒழுகினசேரி செல்லும் சாலையில் மணியடிச்சான் கோவில் சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பை கடந்ததும் சாலையின் வலதுபுறத்தில் செம்மாங்குளம் உள்ளது. தற்போது இந்த குளத்தின் கரையில் நடைபயிற்சி செய்வதற்காக அலங்கார தரைகற்கள் பதிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால், இந்த குளத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், நடைபயிற்சிக்கு செல்லும் பொதுமக்கள் ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதர்களை அகற்றி குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நடராஜன், ஒழுகினசேரி.

மேலும் செய்திகள்