மதுரை
புகார் பெட்டி
|புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மின்விளக்கு எரியுமா?
ராமேசுவரம் சங்குமால் கடற்கரை பூங்கா நடைபாதையில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.எனவே மின்விளக்கு எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயம், ராமேசுவரம்.
ஒளிரும் தகடு அமைப்பார்களா?
ராமநாதபுரம்-ராமேசுவரம் இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையான மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்தை தடுக்கும் பொருட்டு இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் சாலையில் ஒளிரும் தகடுகளை அமைக்க வேண்டும். அதோடு அந்த பகுதியில் எச்சரிக்கை பலகைகள் வைத்தால் விபத்துகள் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
சாகுல் ஹமீது, மண்டபம்.
நகராட்சி அலுவலகத்தில் குவிந்த குப்பைகள்
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அலுவலகத்திற்குள் சென்றாலே துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் அலுவலக சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்ராகிம், ராமநாதபுரம்.
கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சைக்கென மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே ராமநாதபுரம் மருத்துவமனைக்கு தலைக்காய சிகிச்சை மருத்துவர்களை அரசு நியமிக்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
தொடர் மின்தடையால் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி பகுதிகளில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கடந்த 3 நாட்களாக இரவு பகலாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். சீரான மின்வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பஸ்லுல்ஹக், திருப்பாலைக்குடி.
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி 15-வது வார்டு மெயின் ரோட்டில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் குழந்தைகள், பெண்கள் என அனைவரையும் துரத்தி அச்சுறுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் நடக்க மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அலாவுதீன், மானாமதுரை.
இருக்கை வசதி தேவை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பஸ் நிலையத்தில் போதிய இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். பஸ்சுக்காக காத்திருக்கும் முதியோர்கள், கர்ப்பிணிகள் உட்கார இடம் இல்லாததால் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தை விரிவுப்படுத்தி இருக்கை வசதி செய்து கொடுப்பார்களா?
காளீஸ்வரன், காளையார்கோவில்.
கூடுதல் டவுன் பஸ்கள் இயக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களுக்கு போதிய அளவில் டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கிராமப்புற மாணவர்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் உடனடியாக சாக்கோட்டை ஒன்றிய கிராமங்களுக்கு அதிகளவில் டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நவுசாத்அலி, புதுவயல்.
மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர் மற்றும் கிராமப்புறங்களில் நேற்று அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. இதனால் வணிகர்கள், இல்லத்தரசிகள் மிகவும் அவதிப்பட்டனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின்தடை ஏற்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?
ராஜாராம், திருப்புவனம்.
சாலையில் சுற்றித்திரியும் நாய்கள்
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர், உலகம்பட்டி ஆகிய பகுதி சாலைகளில் தெருநாய்கள் ஆங்காங்கே கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் சாலையின் குறுக்கே ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?
சுதர்சனம், எஸ்.புதூர்.
தேங்கி கிடக்கும் குப்பை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 25-வது வார்டு வேலாயுத ரஸ்தா ரோடு பழனியப்பா பேலஸ் எதிரில் குப்பைகள் தேங்கியுள்ளது. தேங்கி கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் குப்பையை தூய்மைப் பணியாளர்கள் அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஜித் குமார், சிவகாசி.
பொதுமக்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சமுசிகாபுரம், சத்திரப்பட்டி சாலை நெடுகிலும் குப்பைகள் அகற்றப்படாமல் பல மாதங்களாக அப்படியே கிடக்கின்றது. அதிலும் அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகள் தான் கிடக்கின்றன. இதனால் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சாலையில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.
பொதுமக்கள், ராஜபாளையம்.
வாகன ஓட்டிகள் அச்சம்
விருதுநகரில் அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அல்லம்பட்டி முக்கில் இருந்து காமராஜர் பைபாஸ் சாலை வரை உள்ள பகுதி குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைப்பார்களா?
பொதுமக்கள், விருதுநகர்.
கண்மாய் தூர்வாரப்படுமா?
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம் பாலவநத்தம் கிராமத்தில் உள்ள கண்மாயில் கருவேல மரங்கள் அதிகஅளவில் ஆக்கிரமித்துள்ளன. இதனால் கண்மாயில் தண்ணீர் சேகரித்து வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே, கண்மாயை தூர்வாரி தண்ணீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், அருப்புக்கோட்ைட.
சுகாதார சீர்கேடு
விருதுநகர் அருகே பாவாலி பஞ்சாயத்து பகுதியில் உள்ள அய்யனார் நகரில் குடிநீர் குழாய் அருகே குப்பைகள் அகற்றப்படாத நிலையில் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பஞ்சாயத்து நிர்வாகம் அய்யனார் நகர் பகுதியில் பரவலாக குப்பைகள் அகற்றாத நிலையில் உள்ளதால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பஞ்சாயத்து நிர்வாகம் அய்யனார் நகர் பகுதியில் முறையாக துப்புரவு பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், விருதுநகர்
வீணாகும் குடிநீர்
மதுரை மாவட்டம் அவனியாபுரம் செம்பூரனி ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து வீணாக செல்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சாலையில் தண்ணீர் செல்வதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும்.
பால முருகன், அவனியாபுரம்.
சுகாதார சீர்கேடு
மதுரை மாவட்டம் காமராஜர் சாலை அருகில் குப்பைகள் அல்லப்படாமல் குவிந்து கிடக்கிறது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து வீதிகளில் சிதறிக்கிடக்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, மதுரை.
பஸ் வசதி வேண்டும்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இருந்து அச்சம்பட்டி ஊமச்சிகுளம் வழியாக செல்லும் 23ஏ பஸ் பல வருடங்களாக இயங்கி வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பஸ் காலையில் இயங்கவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பஸ்சை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சதீஷ், அலங்காநல்லூர்.
ஆக்கிரமிப்பு
மதுரை மாவட்டம் சமயநல்லூர் 8-வது வார்டு பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் மற்றும் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்படுள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சமயநல்லூர்.
ஆபத்தான மின்கம்பம்
மதுரை மாவட்டம் சின்னப்பட்டி கிராமம் அங்கன்வாடி தெருவில் உள்ள மின்கம்பம் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் படி காட்சியளிக்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தினை சரிசெய்திட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வக்குமார், சின்னப்பட்டி.