கன்னியாகுமரி
புகார் பெட்டி
|புகார் பெட்டி
சுகாதார சீர்கேடு
பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட முட்டுக்குழி பகுதியில் சிலர் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டுவந்து ரப்பர் தோட்டத்தின் அருகில் கொட்டி தீவைத்து எரிக்கின்றனர். இதனால், அந்த பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், புகை மூட்டத்தால் ரப்பர் பால் வடிப்புக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. இதனால், தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, தொழிலாளர்கள் நலன்கருதி அங்கு குப்பைகளை கொட்டி தீவைப்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜகுமார், அரியாம்பகோடு.
சுவிட்ச் பெட்டி தேவை
கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட இனயம் பழைய பள்ளித்தெரு பகுதியில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் தெருவிளக்கிற்கான மீட்டர் மற்றும் பீஸ் கட்டை திறந்த வெளியில் உள்ளது. இதனால் மழை பெய்யும் போது நனைந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தெருவிளக்குகளும் அடிக்கடி எரியாமல் போகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுவிட்ச் பெட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செய்யது அலி, இனயம்.
நடவடிக்கை எடுப்பார்களா?
கல்குளம் தாலுகாவுக்குட்பட்ட வெள்ளிகோட்டில் இருந்து குழிக்கோட்டிற்கு செல்லும் சாலையில் சடையங்கால் ஊர் உள்ளது. இந்த ஊருக்கு சரியான பஸ் வசதி இல்லாததால் பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் 1½ கிலோ மீட்டர் நடந்து சென்று வெள்ளிகோட்டில் இருந்து பஸ்சில் செல்லவேண்டி உள்ளது. இதனால், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி பஸ்வசதி ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-லாரன்ஸ், சடையங்கால்.
விபத்து அபாயம்
ஈத்தாமொழியில் இருந்து ராஜாக்கமங்கலம் செல்லும் மேற்கு கடற்கரை சாலையில் துணை மின்நிலையம் உள்ளது. இந்த துணை மின்நிலையத்தின் அருகில் சாலையின் நடுவே கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. மேலும் அந்த இடத்தில் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குழாயை சரி செய்வதுடன், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தையும் சீரமைக்க ேவண்டும்.
-நாகராஜன், ராஜாக்கமங்கலம்.
சேதமடைந்த மின்கம்பம்
கொட்டாரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அருகில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகளில் விரிசல் ஏற்பட்ட நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விமலா மதி, கொட்டாரம்.
மரக்கிளைகளை அகற்ற வேண்டும்
திக்கிலான்விளையில் முன்று சாலைகள் சந்திக்கும் பகுதி எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சந்திப்பின் சாலையோரத்தில் ராட்சத அரசமரம் பெரிய கிளைகளுடன் உள்ளது. காற்றின் வேகத்தில் பரந்து விரிந்து காணப்படும் இந்த மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி ஆபத்தான நிலையில் காணப்படும் மரத்தின் கிளைகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரசேகரன், திக்கிலான்விளை.