கன்னியாகுமரி
புகார் பெட்டி
|புகார் பெட்டி
சுகாதார சீர்கேடு
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை பஸ்நிலையம் உள்ளது. இந்த பஸ்நிலைய பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் குப்பைகள் தேங்கி அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி குப்பைகளை முறையாக அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகம்மது ரபீக், திட்டுவிளை.
சுவிச் பெட்டி மாற்றப்படுமா?
இனயம் இனியநகர் பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின் கம்பத்தில் தெருவிளக்கிற்கான சுவிச் பெட்டி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் விளையாடும் சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சுவிச் பெட்டியை அகற்றி விட்டு புதிய பெட்டியை சிறுவர்களுக்கு எட்டாத வகையில் உயரமான இடத்தில் பாதுகாப்பாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செய்யது அலி, இனயம்.
குடிநீர் குழாயில் உடைப்பு
நுள்ளிவிளை ஊராட்சி உட்பட்ட பேயன்குழியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த ேகாவிலின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் வீணாக சாலையில் பாய்ந்து வருகிறது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
-சுபின், பேயன்குழி.
நடவடிக்கை தேவை
குலசேகரபுரம் ஊராட்சியில் பொதுமக்கள் குடிநீர் வசதிக்காக அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக அந்த கிணற்றின் மேல் பகுதியில் இரும்பாலான மூடியும் அமைக்கப்படுள்ளது. தற்போது இந்த மூடி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், மரத்தின் காய்ந்த இலைகள், குப்பைகள் கிணற்றுக்குள் விழுந்து தண்ணீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி கிணற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள சேதமடைந்த மூடியை அகற்றி விட்டு புதிய மூடி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அய்யப்பன், குலசேகரபுரம்.
விபத்து அபாயம்
கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் மகாதானபுரம் ரவுண்டானா உள்ளது. இந்த பகுதியில் உயரமான தேசிய கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தை சுற்றியுள்ள மின் விளக்குகள் முறையாக எரிவதில்லை. இதனால், இரவு நேரம் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாவதுடன் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உயரமான தேசிய கொடிக்கம்பத்தை சுற்றியுள்ள மின் விளக்குகளை சீராக எரிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.சந்திரசேகரன், சந்தையடி.
வீணாகும் குடிநீர்
இரணியலில் இருந்து ராஜாக்கமங்கலம் செல்லும் சாலையோரம் சரல் தபால் நிலையம் உள்ளது. இந்த தபால் நிலையத்தின் அருகில் தரைமட்டத்தில் கூட்டுக்குடிநீர்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இணைக்கப்பட்டுள்ள குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.தேவதாஸ், ராமநாதபுரம்.