< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
2 Aug 2023 6:45 PM GMT

புகார் பெட்டி

மின்கம்பம் அகற்றப்பட்டது

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பெருவிளையில் முத்தாரம்மன் கோவில்தெரு உள்ளது. இந்த கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடைக்குள் சேதமடைந்த மின்கம்பம் ஒன்று கிடந்தது. இதனால் கழிவுநீர் வடிந்தோட இடையூறு ஏற்பட்டு வந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடைக்குகள் கிடந்த மின்கம்பத்தை அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

தூர்வார வேண்டும்

கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட கிராத்தூர் தெருவிளாகம் பகுதியில் அம்பலகுளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த குளம் முறையாக பராமரிக்காததால் பாசிபடர்ந்து காணப்படுகிறது. மேலும் குளம் நிரம்பி தண்ணீர் மறுகால் ஓடை வழியாக ஏ.வி.ஏம். கால்வாக்கு செல்லும். அந்த மறுகால் ஓடையும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே குளத்தை முறையாக தூர்வாருவதுடன் மறுகால் ஓடையையும் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ்குமார், தெருவிளாகம்.

சேதமடைந்த சுற்றுச்சுவர்

ஆளூரில் அரசு மேல்நிலைப்பள்ளியும், தொடக்கப்பள்ளியும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறிவருகிறது. எனவே மாணவர்கள் நலன்கருதி பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேணு, ஆளூர்.

நாய்கள் தொல்லை

மருங்கூர், குமாரபுரம், தோப்பூர், ராமனாதிச்சன்புதூர் கிராமங்களில் உள்ள தெருக்களில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை சாலைகளில் செல்லும் பாதசாரிகள் வாகன ஓட்டிகளை விரட்டுவதும் துரத்தினால் கடிக்கவும் முயற்சிக்கின்றன. இருச்சக்கர வாகனத்தில் செல்லும்போது குறுக்கே பாய்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அனந்தநாராயணன், மருங்கூர்.

குப்பையை அகற்ற வேண்டும்

திட்டுவிளை அனந்தனார் கால்வாயின் அருகே அம்மணம் குளம் உள்ளது. பூதப்பாண்டி பேரூராட்சியில் குடிநீர் தேவைக்கான குடிநீர் கிணறு குளத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வரும் இந்த குளத்தின் கரையில் சமீபகாலமாக சிலர் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன்சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தண்ணீரும் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குளத்தின் கரையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேக் அப்துல்காதர், திட்டுவிளை.

தெருவிளக்கு எரியவில்லை

ரீத்தாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட குப்பியந்தரையில் இருந்து நீர்வக்குழி செல்லும் சாலையில் தெற்கு பிடாகை ஊர் உள்ளது. இந்த ஊரில் மேல குளத்தின் அருகே சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால் இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சேதமடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுருதி, தெற்கு பிடாகை.

மேலும் செய்திகள்