கன்னியாகுமரி
புகார் பெட்டி
|புகார் பெட்டி
ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?
வேளிமலையில் உருவாகும் வள்ளியாறு கடியப்பட்டணம் கடலில் கலக்கிறது. இந்த ஆறு தற்போது ஆகாயத்தாமரை மற்றும் குப்பைகளால் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக கடியப்பட்டணம் பகுதிகளில் மிகவும் மாசடைந்து காணப்படுகிறது. இதனால், ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே வள்ளியாற்றில் உள்ள ஆகாயத்தாமரை மற்றும் குப்பைகளை அகற்றிட சம்ந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜான் சார்த்தோ, கடியப்பட்டணம்.
எரியாத தெருவிளக்குகள்
திங்கள்சந்தை பேரூராட்சிக்கு உட்பட்ட மாங்குழியில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் சீராக எரிவதில்லை. இதனால், அந்த பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் இரவு நேரம் வீட்டில் இருந்து பெரும் அச்சத்துடன் வெளியே சென்று வருகின்றனர். எனவே, பழுதடைந்த தெருவிளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை பொருத்தி சீராக எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜோசப்நேவிஸ், மாங்குழி.
குளத்தை தூர்வார வேண்டும்
அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பூஜைபுரைவிளையில் சாஸ்தான்கோவில் தெருவின் முடிவில் வால்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை முறையாக பராமரிக்காததால் ஆகாயத்தாமரைகள் படர்ந்து படித்துறை வரை காணப்படுகிறது. மேலும், தண்ணீரும் மாசடைந்து காணப்படுகிறது. இதனால் குளத்தில் குளிக்க முடியாமல் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றி தூர்வாரிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.
விபத்து அபாயம்
ஆசாரிபள்ளத்தில் இருந்து பெரும்செல்வவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மேலப்பெருவிளை சாலைக்கு திரும்பும் இடத்தில் விபத்தை தடுப்பதற்காக குவியாடி கண்ணாடி வைக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பக்கவாட்டில் வரும் வாகனங்களை கவனித்து சென்று வந்தனர். தற்போது இந்த கண்ணாடி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த குவியாடி கண்ணாடியை அகற்றி விட்டு புதிய கண்ணாடி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்றணிசதீஷ், கீழ ஆசாரிபள்ளம்.
போக்குவரத்துக்கு இடையூறு
வெள்ளிச்சந்தை ஊராட்சிக்குட்பட்ட சேனாப்பள்ளி திருப்பிலிருந்து வேம்பனூருக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் இருபக்கமும் பாசன கால்வாய் செல்கிறது. ஆனால் இந்த குறுகிய சாலையோரத்தில் கால்வாயை தூர்வாரிய கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். இதனால் அந்த இடத்தில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையோரத்தில் குவிக்கப்பட்டுள்ள கழிவுகளை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.தேவதாஸ், ராமநாதபுரம்.
சாலையை சீரமைக்க வேண்டும்
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை மெயின் ரோட்டில் இருந்து மார்த்தால் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை பல மாதங்களாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹக்கீம், மார்த்தால்.
பாதசாரிகள் அவதி
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட நெசவாளர் காலனியில் இருந்து ராணித்தோட்டத்துக்கு செல்லும் சாலையில் மழைநீர் ஓடை முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் நெசவாளர் காலனியில் உள்ள கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிந்ேதாடாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மழைநீர் ஓடையை முறையாக அமைத்து தண்ணீர் வடிந்ேதாட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அஷன்சன், நெசவாளர்காலனி.