சீமான் மீது புகார்; நடிகை விஜயலட்சுமியிடம் துணை கமிஷனர் 6 மணி நேரம் விசாரணை
|சீமான் மீது அளித்த புகாரின் பேரில் நடிகை விஜயலட்சுமியிடம் துணை கமிஷனர் உமையாளர் சுமார் 6 மணி நேரம் தீவிரமாக விசாரணை நடத்தினார்.
நடிகர் விஜய் நடித்த 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். மேலும் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார்.
பின்னர் சீமான் தன்னை மனைவியாக ஏற்றுக்கொள்வதாக பேச்சுவார்த்தையில் கூறியதால் அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறியதால் அந்த வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் நடிகை விஜயலட்சுமி, கடந்த 28-ந் தேதி தமிழர் முன்னேற்றப்படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமியுடன் பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், நிறுத்தி வைத்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கும்படியும் புகார் கொடுத்தார்.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி கோயம்பேடு துணை கமிஷனருக்கு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று மாலை நடிகை விஜயலட்சுமி, ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக நடிகை விஜயலட்சுமியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.
இந்த புகாரின் அடிப்படையில் உள்ள உண்மை தன்மைகள், இந்த வழக்கு சம்பந்தமாக அவரிடம் உள்ள ஆதாரங்கள், இருவரும் நெருங்கி பழகியதற்கான புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் ஆகியவற்றின் உண்மை தன்மை குறித்து துணை கமிஷனர் உமையாள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் உள்ள உதவி கமிஷனர் அலுவலக அறையில் வைத்து நடிகை விஜயலட்சுமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதால் போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்தவர்கள் மற்றும் புகார் சம்பந்தமாக விசாரணைக்கு வந்தவர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
போலீஸ் உயர் அதிகாரிகள் மட்டும் நடிகை விஜயலட்சுமியிடம் தனி அறையில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதனால் இன்ஸ்பெக்டர் மற்றும் சக போலீசார் யாரும் போலீஸ் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களோடு சேர்ந்து போலீசாரும் காத்திருந்தனர்.
சுமார் 6 மணிநேரத்துக்கு மேலாக நடந்த விசாரணைக்கு பிறகு நடிகை விஜயலட்சுமி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் ஜீப்பில் அவரது வீட்டுக்கு அழைத்துசெல்லப்பட்டார்.