பெரம்பலூர்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த செல்போன் கடை உரிமையாளர் மீது புகார்
|அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த செல்போன் கடை உரிமையாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் போதையற்ற தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு பிரசாரத்திற்காக ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை தமிழகம் முழுவதும் நடத்தி வந்தனர். அதன் நிறைவு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெறுகிறது. விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் விழா தொடர்பான துண்டு பிரசுரத்தை வழங்கி வந்தனர். நேற்று முன்தினம் மாலை அவர்கள் பெரம்பலூர் நிர்மலா நகர் பகுதியில் உள்ள செல்போன் கடை ஒன்றில் துண்டு பிரசுரம் வழங்கிய போது, அதன் உரிமையாளர் வேப்பந்தட்டை தாலுகா, மலையாளப்பட்டியை சேர்ந்த இளையராஜா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து அந்த துண்டு பிரசுரத்தை கிழித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.