காரைக்காலில் சாலை அமைப்பதில் முறைகேடு என புகார் - தி.மு.க. எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு
|தி.மு.க. எம்.எல்.ஏ. நாக தியாகராஜன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று அளவுகோலை வைத்து ஆய்வு செய்தார்.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பகுதியில் உள்ள வடகட்டளை கிராமத்தில் புதுச்சேரி ஆதிதிராவிடர் வரைநிலை கழகம் மூலம் சுமார் 4 கி.மீ. நீளத்திற்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்ட, சுமார் 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று இரவு அவசர அவசரமாக சாலை போடும் பணி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இன்று காலை, சாலை பெயர்ந்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜனிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து நாக தியாகராஜன் எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று அளவுகோலை வைத்து ஆய்வு செய்தார். சாலை சுமார் 4 செ.மீ. அளவுக்கு அமைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் நாக தியாகராஜன் எம்.எல்.ஏ. அளவுகோலை வைத்து ஆய்வு செய்த போது, வெறும் 2 செ.மீ. அளவிற்கு மட்டுமே சாலை அமைக்கப்பட்டிருந்ததாகவும், சாலை கையோடு பெயர்ந்து வந்ததாகவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சாலைப் பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த எம்.எல்.ஏ., இந்த சாலையை மீண்டும் சரியான தரத்தில் அமைத்து தருவதாகவும், அதுவரையில் இந்த சாலைப் பணிக்கான தொகை ஒப்பந்ததாரருக்கு கொடுக்கப்பட மாட்டாது என்றும் உத்தரவாதம் அளித்தார்.