நாமக்கல்
முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தில் குறைகள் இருந்தால் செல்போனில் புகார் அளிக்கலாம்
|நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தில் குறைகள் இருந்தால் செல்போனில் புகார் அளிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
ஆய்வுக்கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தனியார் மருத்துவமனைகளில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் 2022-2023-ம் ஆண்டு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் உமா பேசும்போது கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 26 தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகள் அனைத்தின் முன்பும், பொதுமக்கள் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து எளிதில் அறியும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 18004253993 என்கிற எண்ணுடன் கூடிய விளம்பர பதாகைகளை முகப்பு பகுதிகளில் வைக்க வேண்டும்.
குறைகளை தெரிவிக்கலாம்
தனியார் மருத்துவமனைகள், பொதுமக்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் அதிகமான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்களுக்கு குறைகள் இருப்பின் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக மாவட்ட நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டு உள்ள வாட்ஸ்-அப் செயலியில் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கப்பட்ட குறைகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, இணை இயக்குனர் (மருத்துவபணிகள்) ராஜ்மோகன், மாவட்ட திட்ட அலுவலர் (முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்) சுரேஷ்குமார், மாவட்ட மருத்துவ அலுவலர் நித்யாஆனந்தன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்பட மருத்துவர்கள், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.