சிவகங்கை
ஆணையாளர் பெயரில் போலி பணிநிறைவு சான்றிதழ்; போலீசில் புகார்
|ஆணையாளர் பெயரில் போலி பணிநிறைவு சான்றிதழ்; போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தேவகோட்டை,
தேவகோட்டை நகராட்சி ஆணையாளராக பணிபுரிபவர் சாந்தி. இவர் தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: தேவகோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வணிக பயன்பாட்டிற்காக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு நகராட்சியால் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதி 2019-ன்படி இணையதளம் மூலமாக பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. நான் பணியேற்றது முதல் யாருக்கும் பணி நிறைவு சான்று வழங்கவில்லை. இந்நிலையில் 12.10.2022 தேதியிட்ட சான்றிதழ் ஒன்று நடைமுறைக்கு மாறாக கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு 9-வது வார்டில் வரி விதிப்பு செய்யப்பட்டு திருப்பத்தூர் சாலையில் உள்ள ஒரு வணிக பயன்பாடு கட்டிடத்திற்கு கட்டிட பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டதாக கூறி எனது கையொப்பத்தை போன்று போலியாக பயன்படுத்தி மின் வாரியத்திற்கு சான்று வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நகரமைப்பு ஆய்வர் சுரேஷ்சேகர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை வழங்கியுள்ளார். இவ்வாறு போலியாக ஆணையாளர் கையொப்பத்தையிட்டு சான்று வழங்கிய நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் நகராட்சி உயர் அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பி உள்ளார்.