தர்மபுரி
கந்துவட்டி கொடுமையால் பாதிப்பு:தம்பதி மீது ஆசிரியர் போலீசில் புகார்
|தர்மபுரியில் கந்துவட்டி கொடுமையால் பாதிப்பு அடைந்த ஆசிரியர் தம்பதி மீது போலீசில் புகார் அளித்தார்.
தர்மபுரி வி. ஜெட்டிஅள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது54), தனியார் பள்ளி ஆசிரியர். இவர் நேற்று தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். தர்மபுரியை சேர்ந்த தம்பதிகளிடம் கடந்த 1-10-2020 முதல் 23-7-2022 வரை பல தவணைகளாக ரூ.39 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கினேன். அந்த தொகைக்கு வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.37 லட்சத்து 68 ஆயிரத்தை கொடுத்துள்ளேன். கடன் வாங்கியதற்கு ஈடாக கையொப்பமிட்ட பூர்த்தி செய்யப்படாத தேதி குறிப்பிடாத 8 காசோலைகளை மற்றும் வெற்று பத்திரங்கள் எனது பெயரில் உள்ள அசல் நில பத்திரம் ஆகியவற்றை கடன் கொடு்த்த நபர்கள் பறித்து கொண்டனர். கடந்த 25-8-2023 அன்று கடன் தொகையில் ஏற்கனவே செலுத்திய தொகை போக மீதி தொகையை செலுத்துகிறேன் என அவர்களிடம் கூறியதற்கு, நான் செலுத்திய தொகை வட்டிக்கே சரியாகி விட்டது, வாங்கிய கடனுக்கு 4 ரூபாய் வட்டி தர வேண்டும், தவறும் பட்சத்தில் நாள் ஒன்றிற்கு மீட்டர் வட்டியாக தரவேண்டும் என்றும், குடும்பத்தையே கொலை செய்து விடுவதாக கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.