நாமக்கல்
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
|தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் காந்தி பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று நடந்தது. காலையில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 'அண்ணலின் அடிச்சுவட்டில்', 'காந்தி கண்ட இந்தியா', 'வேற்றுமையில் ஒற்றுமை', 'பாரத தேசமென்று பெயர் சொல்லுவோம்' என்ற தலைப்பில் மாவட்டம் முழுவதும் இருந்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பேசினர்.
தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போட்டி நடத்தப்பட்டன. 'வாழ்விக்க வந்த எம்மான்', 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்', 'சத்திய சோதனை', 'எம்மதமும் நம்மதம்', 'காந்தியடிகளின் வாழ்க்கையிலே', 'இமயம் முதல் குமரி வரை' போன்ற தலைப்புகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரமும், அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு பரிசுத்தொகையும் வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறையினர் தெரிவித்தனர்.