வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது: வறட்சி பாதிப்புக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும் - ராமதாஸ்
|தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் முழுமைக்கும் ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு இறுதியில் கொட்டித்தீர்த்த பெருமழையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ரூ.160 கோடி நிவாரணம் வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுடன் ஒப்பிடும் போது, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இழப்பீடு போதுமானதல்ல. அதுமட்டுமின்றி, வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை மற்றும் சம்பா பயிர்களுக்கு இழப்பீடு வழங்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது ஆகும்.
தென் மாவட்டங்களில் 2023 டிசம்பர் மாத இறுதியில் பெய்த மழையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிகக்கடுமையான அளவிலும், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவிலும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக 12 லட்சம் ஹெக்டேருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டன. ஆனால், அவற்றில் ஒரு லட்சத்து 64,866 ஹெக்டேர், அதாவது 4 லட்சத்து 12,165 ஏக்கர் பரப்பளவிலான பயிர் சேதங்களுக்கு மட்டும் தான் தமிழக அரசு நிவாரணம் வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையும் போதுமானதல்ல. மொத்தம் 4 லட்சத்து 12,165 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில், அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.160.42 கோடி மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஏக்கருக்கு ரூ.3,892 மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூ.25,000 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் ஆறில் ஒரு பங்குக்கும் குறைவானத் தொகையை தமிழக அரசு இழப்பீடாக வழங்குவது எந்த வகையில் நியாயம்?
அதேபோல், வறட்சியால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான குறுவை பயிர்களுக்கும், முழுமையான சம்பா பயிர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படாதது தமிழக உழவர்களிடம் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. குறுவை பருவத்தில் 2 லட்சம் ஏக்கரில் முழுமையாகவும், 1.5 லட்சம் ஏக்கரில் ஓரளவுக்கும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், வெறும் 40,000 ஏக்கரில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மட்டும் தான் ஏக்கருக்கு ரூ.5,400 என்ற அளவில் தான் அரசு இழப்பீடு வழங்கியது. இது எந்த வகையிலும் போதுமானதல்ல.
சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்த அனைத்து உழவர்களும் பெரும் இழப்பைச் சந்தித்திருக்கின்றனர். அக்டோபர் மாதம் தொடங்கிய சம்பா/தாளடி சாகுபடி பிப்ரவரி இறுதியில் தான் நிறைவடையும். இந்தக் காலத்தில் மழை பெய்யும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் காவிரியில் குறைந்தது வினாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால், சம்பா நடவு தொடங்கியது முதல் ஒரு நாள் கூட சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. பிப்ரவரி 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை மட்டுமே வினாடிக்கு 4,000 கனஅடி முதல் 6,000 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இது சம்பாப் பயிருக்கு எந்த வகையிலும் உதவவில்லை. காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படாதது தான் சம்பா மற்றும் தாளடி பயிர்களின் சாகுபடி பாதிக்கும் கீழாக குறைந்ததற்கு காரணம்.
குறுவை பருவத்தில் 3.5 லட்சம் ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், வெறும் 40,000 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், சம்பா/தாளடி பருவத்தில் வறட்சியால் 12 லட்சம் ஏக்கரில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவருக்குக் கூட அரசு இழப்பீடு வழங்கப்படவில்லை. குறுவை, சம்பா சாகுபடிக்காக ஏக்கருக்கு சராசரியாக ரூ.30,000 வரை உழவர்கள் செலவழித்துள்ளனர். ஆனால், செலவழித்த பணத்தில் பாதியைக் கூட திரும்ப எடுக்க முடியாததால், சம்பா சாகுபடிக்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு உழவர்கள் ஆளாகியுள்ளனர். குறுவைப் பயிர்கள் கருகிய நிலையில், அதற்காக வாங்கிய கடனை இன்னும் செலுத்தாத உழவர்கள், இப்போது சம்பா சாகுபடி வீழ்ச்சி அடைந்ததால் கூடுதல் கடனை சுமக்க வேண்டியுள்ளது. இதிலிருந்து அவர்களால் மீளவே முடியாது.
வார்த்தைக்கு வார்த்தை உழவர்களின் நலன்களை பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் திமுக அரசு, குறுவை மற்றும் சம்பா பருவத்தில் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்க மறுப்பது நியாயமல்ல. உழவர்களின் துயரத்தை உணர்ந்து கொண்டு தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் முழுமைக்கும் ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தின் பிற பகுதிகளில் சம்பா பருவத்தில் வறட்சியால் ஏற்பட்ட விளைச்சல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல், குறுவை பருவத்தில் முழுமையாக கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதமும், ஓரளவு கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.