கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் சீர்வரிசை வழங்கினார்
|சைதாப்பேட்டையில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சீர்வரிசைகளை வழங்கினார்.
சென்னை,
சென்னை சைதாப்பேட்டையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் நேற்று சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர் வரிசைகளை வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பிணி தாய்மார்களின் நலன் காக்க சமுதாய வளைகாப்பு எனும் சமுதாய விழிப்புணர்வு தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை ரூ.3 கோடியே 75 லட்சம் செலவில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.
டெங்கு பாதிப்பு
சென்னை கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரிக்கு பல்வேறு வசதிகள் தொடங்கி வைக்கப்பட்டு வருகிறது. விரைவில் 200 கட்டண படுக்கைகள் உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது.
டெங்கு உள்ளிட்ட நோய்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. பொதுமக்கள் டெங்கு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. அக்டோபர் 1-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களுக்கான சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர்கள் ஸ்ரீதரன், மோகன்குமார், மாவட்ட திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.