தேனி
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
|கடமலைக்குண்டுவில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடமலை-மயிலை ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, கடமலைக்குண்டுவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவர் சித்ரா சுரேஷ் தலைமை தாங்கி, வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, கடமலை-மயிலை ஒன்றிய அலுவலர் செல்வி சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கடமலை-மயிலை ஒன்றியத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர். அப்போது அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் உணவு முறைகள் தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் கர்ப்பிணிகளுக்கு 7 வகையான உணவுகள் மற்றும் வளைகாப்பு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சேதுராஜா மற்றும் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அங்கன்வாடி பணியாளர்கள் செய்திருந்தனர்.