திருநெல்வேலி
300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா; அமைச்சர் கீதாஜீவன் சீர்வரிசை பொருட்களை வழங்கினார்
|மானூர், மேலப்பாளையத்தில் 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. விழாவில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
மானூர், மேலப்பாளையத்தில் 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. விழாவில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
சமுதாய வளைகாப்பு விழா
நெல்லை மாவட்டம் மானூர் யூனியன் அலுவலகம் மற்றும் மேலப்பாளையம் மாநகராட்சி திருமண மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது. நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஊட்டச்சத்து முக்கியம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் நலன் காக்கும் வகையிலும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். பேறுகால விடுப்பு ஓராண்டாக உயர்வு, மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டம், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கர்ப்பணிகளுக்கு வீடுகளில் வளைகாப்பு விழா நடத்துவது வழக்கம் ஆகும். வயிற்றில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியோடும், ஆரோக்கியத்தோடும் வளர வேண்டும் என்பதற்காக வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது.
கர்ப்பிணி தாய்மார்கள் ஆரோக்கியத்துடன் அறிவாற்றல் மிக்க குழந்தைகளை பெற வேண்டும். அதற்கு தாய்மார்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதுடன் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகள் அதிகளவு சாப்பிட வேண்டும். கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்குவதை உறுதி செய்யும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள 36 லட்சம் குழந்தைகளின் உடல் எடை, உயரம் கணக்கீடு செய்யப்பட்டு, அதில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய 9 லட்சம் குழந்தைகள் கண்டறியப்பட்டனர். இந்த குறைபாட்டை போக்க 2 மாதங்களுக்கு ஊட்டசத்து மிகுந்த இனிப்பு உணவு பொருட்களை வழங்குவதற்கு முதல்-அமைச்சர் அனுமதி வழங்கி உள்ளார். மேலும் குறைபாடு உள்ள 45 ஆயிரம் குழந்தைகளுக்கு உயர் மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை, அவர்களின் ஊட்டச்சத்து சார்ந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
300 கர்ப்பிணிகள்
மானூர் மற்றும் மேலப்பாளையத்தில் நடந்த விழாக்களில் 300 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களாக தாம்பூலம், சேலை, சட்டை துணி, மஞ்சள், குங்குமம், வளையல், மாலை மற்றும் முறுக்கு, அதிரசம், தேங்காய், நெல்லிக்காய், கடலைமிட்டாய் உள்ளிட்ட ஊட்டச்சத்து மிகுந்த பொருட்களும், கலவை சாதங்களும், விழிப்புணர்வு கையேடுகளும் வழங்கப்பட்டது.
இதற்கிடையே நெல்லை பாலபாக்யா நகரில் திருநெல்வேலி சமூக சேவை சங்கம் நடத்தும் சரணாலயம் குழந்தைகள் காப்பகத்தையும், புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தையும் அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் கதீஜா இக்லாம் பாசிலா, ரேவதி பிரபு, பிரான்சிஸ், மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன், மகளிர் தொண்டர் அணி மாநில துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநகர துணை செயலாளர்கள் சுதா மூர்த்தி, மூளிகுளம் பிரபு, மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.சுரேஷ், முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன், நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் தனலட்சுமி, வடடார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் ஜொசிற்றாள், ராஜ பிரியா, மாநகர நல அலுவலர் சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.