அரியலூர்
150 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
|ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் 150 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம் ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா குருவாலப்பர்கோவில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் அன்பரசி தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் 150 கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார்.
இந்தநிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும், வேளாண்மை அட்மா குழுத்தலைவருமான மணிமாறன், வட்டார தலைமை மருத்துவ அலுவலர் மேகநாதன், குருவாலப்பர்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் வைஜெயந்திமாலா முல்லைநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார குழந்தை திட்ட அலுவலர் சாருநிலா வரவேற்றார். முடிவில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் தமயந்தி நன்றி கூறினார்.