
அரியலூர்
100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை அமைச்சர் சிவசங்கர் நடத்தி வைத்தார்.
சமுதாய வளைகாப்பு விழா
அரியலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செந்துறையில் 100 பெண்களுக்கும் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை நடத்தி வைத்தார். விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார்.
எண்ணிலடங்கா திட்டங்கள்
விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசும்போது கூறியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பொற்கால ஆட்சியில், பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய, சமுதாயத்தில் சுயமரியாதையுடன் பெண்கள் வாழ, யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக தொழில்தொடங்கி வாழ்வில் முன்னேற என பெண்களின் முன்னேற்றத்தை மட்டுமே மையப்படுத்தி எண்ணிலடங்கா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படும் திட்டம் ஒரு சிறப்பான திட்டமாகும். ஏழை, எளிய வீட்டு கர்ப்பிணிகளுக்கு அரசின் செலவில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு கர்ப்பிணிக்கும், அவர்களது வீட்டில் எவ்வளவு சிறப்பாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுமோ அதைவிட சிறப்பாக, அரசின் சார்பில் நடத்தப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு கைநிறைய வளையல் அணிவித்து, அவர்களுக்கு உறவினர்கள் கூடி நின்று செய்கின்ற அனைத்து சம்பிரதாயங்களும் முறையாக செய்யப்பட்டு, 5 வகை கலவை சாதம் வழங்கி தமிழ்நாடு அரசு வெகு விமரிசையாக சமுதாய வளைகாப்பை கொண்டாடி வருகிறது.
அரசு பஸ்களில் இலவச பயணம்
முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றுள்ள கடந்த 2 ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 1,300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. கடந்த 1989-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோது பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை இந்தியாவில் முதல் முறையாக நிறைவேற்றினார். அந்த வகையில் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் கல்லூரியில் படிக்கும் போது மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்ற சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.
தமிழகத்தில் அரசு நகர பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள்தோறும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். அதனை தொடர்ந்து அவர் கர்ப்பிணிகளுக்கு 5 வகை கலவை சாதங்களை பரிமாறினார்.