கடலூர்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சவப்பாடை ஊர்வலம்
|காடாம்புலியூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சவப்பாடை ஊர்வலம் நடத்தினர்.
பண்ருட்டி,
பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் பகுதியில் உள்ள, தெற்கு மேல்மாம்பட்டு, சின்னபுறங்கணி, காடாம்புலியூர் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்தும், சுடுகாட்டு இடத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றி சுடுகாட்டு இடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும், கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை அரசே கட்டித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காடாம்புலியூர் பஸ் நிறுத்தம் அருகில் சவப்பாடை ஊர்வலம் நடந்தது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகி ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட செயலாளர் துரை, பொருளாளர் பாஸ்கர், வடக்கு ஒன்றிய செயலாளர் ஞானசேகர், மாவட்ட விவசாய சங்க தலைவர் சிவக்குமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், தனபால், லட்சுமி, ஒன்றிய துணை செயலாளர்கள் மணிவண்ணன், வெங்கடேசன், கலைராஜா, பாலச்சந்தர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுபற்றி அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஒருவார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலைந்து சென்றனர்.