< Back
மாநில செய்திகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தவித நிதியும் பெறவில்லை - முத்தரசன்
மாநில செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தவித நிதியும் பெறவில்லை - முத்தரசன்

தினத்தந்தி
|
17 Feb 2024 11:54 PM IST

சுதந்திரமான தேர்தல் நடைமுறைகளுக்கு எதிரான தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

பா.ஜ.க. ஒன்றிய அரசு பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களோடு இணைந்து செயல்படும் தனது கூட்டுக் களவாணி செயலை மறைத்துக் கொள்ள தேர்தல் பத்திரம் திட்டத்தை வெளியிட்டது. இத்திட்டம் செயல்பட்ட கடந்த ஐந்தாண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. அதிகம் நிதி பெற்றிருப்பது சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் வெளியாகியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நிதியில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக பா.ஜ.க. பெற்றிருப்பதையும் செய்திகள் உறுதி செய்கின்றன.

வெளிப்படைத்தன்மை இல்லாத, வாக்காளர்களின் உரிமையை மறுக்கும், நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடைமுறைகளுக்கு எதிரான தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பில் தேர்தல் பத்திரங்கள் மூலம் இதுவரை எந்தெந்த கட்சிகள், எந்தெந்த நிறுவனங்களிடம் நிதி பெற்றுள்ளனர் என்ற விபரத்தை தேர்தல் ஆணையம் மார்ச் 13-ம் தேதிக்குள் தனது இணைய வலை தளத்தில் பதிவிட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ள விபரங்கள் என்ற தலைப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ள நிதி என்று வெளியாகி இருப்பது சரியல்ல. அது முற்றிலும் தவறான தகவலாகும். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பிய நேரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி "தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தவித நிதியும் பெறவில்லை" என்பதை திட்டவட்டமாகவும் வெளிப்படையாகவும் கடிதம் எழுதியுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்