< Back
மாநில செய்திகள்
தமிழ் மொழியை வஞ்சிக்கும் மோடி அரசு - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
மாநில செய்திகள்

தமிழ் மொழியை வஞ்சிக்கும் மோடி அரசு - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தினத்தந்தி
|
1 Jan 2023 9:08 AM IST

தமிழ் மொழியை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு கண்டனம் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் பிரதமர் மோடியும், பாஜகவும் தமிழ்நாட்டின் அரசியல் ஆதாயம் தேட பல்வேறு சாகசங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழில் இரண்டொரு வார்த்தைகள் பேசுவது, மகாகவி பாரதியார் கவிதைகள், திருக்குறள் உள்ளிட்ட தலைசிறந்த படைப்புகளில் சிலவற்றை மேற்கோள் காட்டி பேசுவது, அண்மையில் காசியில் தமிழ் சங்கம விழா எடுத்தது என்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி, ஆரவார வாய்ச்சவாடல் அடித்து வருகின்றனர் ஆனால் தமிழ் மொழியை அழித்தொழிக்கும் வஞ்சகச் செயலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் அங்கீகரிக்கபட்ட 22 மொழிகளை சமமாக அணுக வேண்டிய ஒன்றிய அரசு, தமிழ்மொழி உட்பட பல மாநில மொழிகளை புறக்கணித்து, சமஸ்கிருத மொழியை திணித்து, ஏற்குமாறு நிர்பந்தித்து வருகிறது.

குறிப்பாக தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை வெட்டி குறைத்து, சமஸ்கிருத மொழிக்கு அதீத நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ் மொழி வளர்ச்சி தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசின் கல்வித் துறை இணையமைச்சர் அளித்த எழுத்து மூலமான பதிலில் சமஸ்கிருதத்துக்கு ரூ.199 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.12 கோடிக்கும் குறைவாக நிதி ஒதுக்கியிருக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு வளர்ச்சி, மக்கள் நலன் குறித்து நீலிக் கண்ணீர் வடித்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாய் திறந்து பேசுவாரா? எட்டுக் கோடிக்கும் அதிகமான மக்கள் பேசும் மொழியான தமிழுக்கு, தொன்மை சிறப்பும், இலக்கிய செறிவும் கொண்ட செம்மொழியாம் தமிழ் மொழியை அழித்தொழிக்கும் செயலை வாய் பொத்தி, கைகட்டி, முதுகை வளைத்து பணிந்து ஏற்பாரா? என தமிழக மக்கள் வினா எழுப்பி வருகின்றனர்.

தமிழ்மொழிக்கு வஞ்சகம் செய்யும், மோடியின் ஒன்றிய அரசை, அதிகாரத்தில் இருந்து நீக்குவது மட்டுமே தமிழ்மொழிக்கு பாதுகாப்பாக அமையும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்