சாதாரண மனிதருக்கும் நீதி கிடைக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி
|சாதாரண மனிதருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா புர்வாலா பேசினார்.
அடிக்கல் நாட்டு விழா
சேலம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் ரூ.59.43 கோடி மதிப்பில் புதிதாக 16 நீதிமன்ற கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வரவேற்றார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் இளந்திரையன், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா புர்வாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நீதிமன்ற கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உரிய மரியாதை
வக்கீல்கள் நீதியை நிலைநாட்ட முழுமையாக பணியாற்ற வேண்டும். மூத்த வக்கீல்களின் அனுபவத்தை பெற்று நியாயத்திற்காக போராட வேண்டும். மூத்த வக்கீல்களுக்கு உரிய மரியாதை கொடுத்து மூத்த வக்கீல்களிடம் இருந்து அவர்களின் புத்திசாலித்தனத்தையும், அனுபவத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
காகிதம் இல்லா நீதிமன்றம் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வக்கீல்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் சாதாரண எளிய மக்களின் உரிமைக்காக பாடுபட வேண்டும். நீதிமன்றத்தை நாடாமல், நாடுவதற்கு தயங்கி கொண்டு உரிமை கிடைக்காமல் இருக்கும் சாதாரண மனிதருக்கும் நீதி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடினமாக உழைத்தால்...
இளம் வக்கீல்கள், மூத்த வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் அனைவரும் தங்களின் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கிட வேண்டும். அது மன அழுத்தத்தை குறைக்கும். அப்போது தான் நீதிமன்ற பணியிலும் முழு கவனம் செலுத்த முடியும். குறிப்பாக ஜூனியர் வக்கீல்கள், சீனியர் வக்கீல்களிடம் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும். கடினமாக உழைத்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.
எப்போதும் வேலை என்று இருக்காமல் குடும்பத்துடனும் அதிக நேரம் செலவிட வேண்டும். அப்போது தான் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட்டு வேலை செய்யும்போது எந்தவித தடங்கலும் இல்லாமல் சிறப்பாக பணிகள் செய்திட முடியும்.
இவ்வாறு தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா புர்வாலா பேசினார்.