அர்ச்சகர்கள் தகுதியை ஆய்வு செய்ய குழு -ஐகோர்ட்டு உத்தரவு
|சிறுவர்கள் எல்லாம் அர்ச்சகர்களாக செயல்படுவதால், கோவில்களில் அர்ச்சகர்களின் தகுதி குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் தொடர்பான வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சு விசாரித்து வருகிறது. திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலில் செயல் அதிகாரியால் மரபுகள் மீறப்படுவதாக கூறி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர்.
அப்போது, 'திருப்பணிக்குழு அமைக்கப்படாமல், கோவிலில் பாலாலயம் நடத்த இருப்பதாக செயல் அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திருப்பணிக்காக நன்கொடையாக வசூலிக்கப்படும் பணம் எங்கிருந்து வசூலிக்கப்படுகிறது? எந்த விவரங்களும் இல்லை' என்று மனுதாரர் வாதிட்டார்.
அர்ச்சகர்கள்
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 'திருப்பணிக்குழு அமைக்காமல் எப்படி பாலாலயம் நடைபெறும்? திருப்பணிக்கு நன்கொடையாக வரும் பணம் தணிக்கை செய்யப்படுகிறதா?' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அறநிலையத்துறை தரப்பில் வக்கீல், 'அர்ச்சகர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் பாலாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதா, நன்கொடை தணிக்கை செய்யப்படுகிறதா என்பது குறித்த முழு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்' என்று கோரினார்.
குழு அமைப்பு
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 'அர்ச்சகர்கள் எடுத்த முடிவைத்தான் செயல் அலுவலர் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார். எனவே, வழக்கின் விசாரணையை வரும் 31-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். கோவில்களில் அர்ச்சகர்களின் தகுதியை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். 10, 12 வயது சிறுவர்கள் எல்லாம் அர்ச்சகர்களாக செயல்படுகின்றனர். அதனால், அர்ச்சகர்கள் நியமனத்துக்கு வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டியதுள்ளது. கோவில்களை சீரமைக்க அனுமதி வழங்கும் புராதன குழு உள்ளிட்ட குழுக்கள் மாற்றியமைக்கப்படும்' என்று உத்தரவிட்டனர்.