மதுரை
திருமங்கலம்-ஒத்தக்கடை மெட்ரோ ரெயில் திட்டம் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு
|சென்னை மெட்ரோ ரெயில் திட்ட இயக்குனர் தலைமையில் திருமங்கலம்-ஒத்தக்கடை மெட்ரோ ரெயில் சாத்தியக்கூறு குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது.
சென்னை மெட்ரோ ரெயில் திட்ட இயக்குனர் தலைமையில் திருமங்கலம்-ஒத்தக்கடை மெட்ரோ ரெயில் சாத்தியக்கூறு குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது.
மெட்ரோ ரெயில்
தமிழக சட்டசபையில் இந்த வருடம் பட்ஜெட்டில் மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் முன்னுரிமை அடிப்படையில் ரூ.8,500 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, பொதுப்பணித்துறை, தொல்லியல் துறை மற்றும் மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் ஆகியவற்றின் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மதுரையில் நடந்தது. அதாவது, இந்த திட்டத்துக்கான விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த ஒப்புதல் கிடைத்த பிறகு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஒப்புதல் கிடைத்தவுடன் நிதி ஆதாரம் திரட்டப்பட்டு பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
31 கிலோ மீட்டர் தூரம்
மேலும் மதுரையில் 3 பெட்டிகளை கொண்ட ரெயில் இயக்கப்படும். இதில் 750 பயணிகள் பயணம் செய்யலாம். சுமார் 10 நிமிட இடைவெளியில் ஒரு ரெயில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரையிலான 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்பட உள்ள மெட்ரோ ரெயில் போக்குவரத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதற்காக மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் 75 இடங்களில் மண் பரிசோதனை நடந்து வருகிறது.
அதாவது திருமங்கலம்-ஒத்தக்கடை இடையே 31 கிலோமீட்டர் தூரத்தில் ஒவ்வொரு அரை கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஒரு இடத்தில் மண் பரிசோதனை நடந்து வருகிறது. மண் பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட மண் அனைத்தும் ஐதராபாத்தில் உள்ள ஆய்வகத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதேபோல, மதுரை வைகை ஆற்றுப்பகுதிக்குள் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால் அந்த பாதையில் ஆழ்வார்புரம், ஏ.வி.மேம்பால பகுதியில் மண் பரிசோதனைக்காக மண் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக நவீன எந்திரங்கள் மூலம் சுமார் 30 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டு மண் மாதிரி சேகரிக்கப்படுகிறது. இதில் 66 இடங்களில் மண் பரிசோதனை முடிவடைந்துள்ளது.
திட்ட இயக்குனர் ஆய்வு
இந்த நிலையில், இந்த திட்ட பணிகளுக்கான இறுதி அறிக்கை தயாரிப்பது குறித்து மெட்ரோ ரெயில் திட்ட இயக்குனர் அர்ஜூனன் தலைமையிலான குழுவினர் நேற்று மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலான 31.30 கிலோ மீட்டர் தொலைவுக்கு 18 நிலையங்களுடன் கூடிய மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்துவதற்கான பணிகளை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கி வருகிற 2027-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது வழித்தடங்களில் நில எடுப்பு மற்றும் நிலத்தின் தேவைக்கான சர்வே பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வசந்தநகர்-கோரிப்பாளையம் இடையே பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டரும், மேல் பகுதியில் 26 கிலோ மீட்டரும் மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. திருமங்கலம் பஸ் நிலையம், தோப்பூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருமங்கலம் ரெயில் நிலையம் பகுதியில் இந்த குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது மெட்ரோ திட்டப் பணிகள் தொடங்கினால் போக்குவரத்தில் செய்யக் கூடிய மாற்றங்கள் குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்தனர்.
---------------
மீனாட்சி அம்மன் கோவில் பகுதி,
வைகை ஆற்றில் நடக்கும் பணி சவாலானது
மெட்ரோ திட்ட ஆய்வு பற்றி அதிகாரிகள் கூறும்போது, ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி குறித்தும் ஆய்வில் விவாதிக்கப்பட்டது. மதுரை ரெயில் நிலையம் அருகே மெட்ரோ ரெயில் நிறுத்தம் அமைய உள்ள பகுதிகள், மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன் கோவில் அருகே மெட்ரோ ரெயில் நிறுத்தம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி அமைக்கப்படக்கூடிய மெட்ரோ ரெயில் நிறுத்தத்தில் மாசி வீதிகளில் தேரோட்டம் பாதிக்கப்படாத வகையிலும் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் பழமையான கட்டிடங்கள் சேதம் அடையாத வகையிலும் ரெயில் நிறுத்தம் அமைவதற்கு ஏற்ப ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இதில், மதுரை வைகை ஆறு முதல் கோரிப்பாளையம் வரையிலான சுரங்கப்பாதை மெட்ரோ அமைப்பதற்கான பணிகள் தொடங்க தாமதம் ஏற்படும். மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை பொருத்தமட்டிலும் வைகை ஆற்றின் கீழ் அமைப்பது, மீனாட்சியம்மன் கோவில் பகுதியில் மாசி வீதியில் மெட்ரோ நிறுத்தம் செயல்படுத்துவது ஆகியவை சவாலான பணிகளாக இருக்கும். மதுரையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதால் மத்திய அரசின் நிதியுதவி கிடைப்பதிலும், நிலம் கையகப்படுத்துவதிலும் எந்த சிரமமும் இருக்காது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.