< Back
மாநில செய்திகள்
பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க தாசில்தார்கள் தலைமையில் குழு
விருதுநகர்
மாநில செய்திகள்

பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க தாசில்தார்கள் தலைமையில் குழு

தினத்தந்தி
|
20 Oct 2023 2:26 AM IST

பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க தாசில்தார்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரெங்கபாளையத்தில் சில நாட்களுக்கு முன்பு பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டு அந்த கடையின் பின்புறம் கிப்ட் பாக்ஸ் போட்டுக்கொண்டிருந்த 12 பெண்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக இறந்தனர்.

அதிர்ச்சிக்குள்ளாகிய இந்த சம்பவத்தை தொடர்ந்து இனி வரும் காலத்தில் இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தாசில்தார்கள் அய்யாகுட்டி, சிவக்குமார், மாதா, சாந்தி ஆகியோர் தலைமையில் தனித்தனியாக 4 சிறப்பு குழுவினை அமைத்துள்ளது.

இந்த சிறப்புக்குழு மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு கடைகளில் திடீர் ஆய்வுகள் செய்து விதிமுறை மீறல் இருந்தால் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அளிக்கும். அதன்படி மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட பட்டாசு கடையின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்.

இந்த குழுவில் போலீசார், தீயணைப்புத்துறையினர் இடம் பெற்றுள்ளனர். தீபாவளிக்கு இன்னும் 22 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சிறப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சீசன் நேரத்தில் கடையில் கூடுதல் வெடிகளை வைத்திருந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதால் வியாபாரமும் பாதிக்கப்படும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


பாதுகாப்பாக தீபவாளியை கொண்டாட விதிகளை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளை வலியுறுத்தி வருகிறது.

இந்தநிலையில் நேற்று அதிகாரிகள் குழுவினர் பல்வேறு பட்டாசு கடைகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது விதிகளை மீறியதாக 7 பட்டாசு கடைகளுக்கு சிவகாசி கிழக்கு போலீசார் உதவியுடன் வருவாய்த்துறையினர் "சீல்" வைத்தனர்.

மேலும் செய்திகள்