திருப்பூர்
மக்களின் குறைகளுக்கு துரிதமாக தீர்வு காணப்படும்
|திருப்பூர் மாநகர மக்களின் குறைகளுக்கு துரிதமாக தீர்வு காணப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கூறினார்.
திருப்பூர் மாநகர மக்களின் குறைகளுக்கு துரிதமாக தீர்வு காணப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கூறினார்.
குறைகளுக்கு துரித தீர்வு
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த பிரபாகரன், சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய பிரவீன்குமார் அபினபு மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். திருப்பூர் மாநகரின் 14-வது போலீஸ் கமிஷனராக பிரவீன்குமார் அபினபு (வயது 43) நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவரை போலீஸ் அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பூர் மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களின் குறைகளை துரிதமாக தீர்க்கும் வகையில் செயல்பாடுகளை மேம்படுத்துவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட உள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை முற்றிலும் தடுப்பதற்கு கவனம் செலுத்தப்படும்.
வெளிமாநில தொழிலாளர்கள்
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட அனைத்து மக்களும் காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும். குற்றத்தடுப்பு நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு தொழில் நிறுவனத்தினர், பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் திருப்பூரில் வசிக்கிறார்கள். அவர்கள் தொடர்பான பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டால் அவற்றை முற்றிலுமாக தீர்க்க, தொலைநோக்கு பார்வையுடன் ஆராய்ந்து தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவின் சொந்த ஊர் தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டையை சேர்ந்தவர். பி.டெக். படிப்பு முடித்து 2004-ம் ஆண்டு வருமான வரித்துறையில் ஐ.ஆர்.எஸ். தேர்வாகி பின்னர் 2005-ம் ஆண்டு ஐ.பி.எஸ்.ஆக தேர்ச்சி பெற்றார். பின்னர் கடலூர் மாவட்டம் விருதாசலம், திருவள்ளூர் மாவட்டம் முத்துப்பேட்டை, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆகிய பகுதியில் கூடுதல் போலீஸ் கமிஷனராகவும், அதன்பிறகு திருவாரூர், கரூர், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், கவர்னரின் கூடுதல் துணை கமிஷனராகவும், சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றியுள்ளார். திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.யாகவும், பின்னர் சேலம் சரக டி.ஐ.ஜி.யாகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு அண்ணா பதக்கத்தையும் பெற்றுள்ளார்.