< Back
மாநில செய்திகள்
போலீஸ்காரர் கன்னத்தில் அறைந்த சூப்பிரண்டிடம் கமிஷனர் விசாரணை
சேலம்
மாநில செய்திகள்

போலீஸ்காரர் கன்னத்தில் அறைந்த சூப்பிரண்டிடம் கமிஷனர் விசாரணை

தினத்தந்தி
|
9 Aug 2022 1:37 AM IST

சேலம் அருகே போலீஸ்காரர் கன்னத்தில் அறைந்த போலீஸ் சூப்பிரண்டிடம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா விசாரணை நடத்தினார்.

சேலம் அருகே போலீஸ்காரர் கன்னத்தில் அறைந்த போலீஸ் சூப்பிரண்டிடம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா விசாரணை நடத்தினார்.

உணவு கடத்தல் தடுப்பு பிரிவு

கோவை மண்டல உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் பாலாஜி. இவர் நேற்று முன்தினம் காலை சேலத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆய்வு பணிகளை முடித்துக்கொண்டு காரில் கோவைக்கு சென்று கொண்டிருந்தார்.

மகுடஞ்சாவடி அருகே உள்ள காகாபாளையம் பகுதியில் சென்ற போது அவரது காருக்கு முன்னால், மோட்டார் சைக்கிளில் ஒருவர் 2 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக அவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி, போலீஸ்காரர் சிவக்குமார் (போலீஸ் வேன் டிரைவர்) ஆகியோரிடம் தகவல் தெரிவித்து உள்ளார். ஆனால் அவர்கள் ரேஷன் அரிசி கடத்தியவரை பிடிக்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

கன்னத்தில் அறைந்தார்

இந்த நிலையில் ரேஷன் அரிசி கடத்தியவர் அந்த பகுதியில் உள்ள மண்சாலை வழியாக சென்று தலைமறைவாகிவிட்டார். அதே நேரத்தில் ரோந்து போலீசார் இருந்த இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி வந்தார். அப்போது அவர் ரேஷன் அரிசி கடத்தி செல்பவரை பிடிக்க உத்தரவிட்டும் ஏன் பிடிக்க வில்லை என்று கேட்டு உள்ளார்.

அதற்கு அவர்கள் ரேஷன் அரிசி கடத்தி செல்பவரை பிடித்தால் தங்களை தாக்கிவிடுவாரோ என்ற சிறிய அச்சத்தால் பிடிக்க தயக்கம் காட்டினோம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி திடீரென போலீஸ்காரர் சிவக்குமார் கன்னத்தில் அறைந்து உள்ளார்.

போலீஸ் கமிஷனர் விசாரணை

இதுகுறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ்காரரை சூப்பிரண்டு தாக்கியது உண்மையா? என்று விசாரிக்கும்படி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். விசாரணையில் போலீஸ்காரர் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

மேலும் போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று போலீஸ்காரர் சிவக்குமார் விசாரணை அதிகாரியிடம் எழுதி கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விசாரணை அறிக்கை போலீஸ் கமிஷனரிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து போலீஸ்காரரை தாக்கிய, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜியை நேரில் அழைத்து போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் சேலம் மாநகர போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்