ராமநாதபுரம்
முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழா திடலை மீனவர் நலத்துறை ஆணையர் ஆய்வு
|மண்டபத்தில் வருகிற 18-ந்தேதி மீனவர்கள் மாநாடு நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழா திடலை மீனவர் நலத்துறை ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்.
பனைக்குளம்.
மண்டபத்தில் வருகிற 18-ந்தேதி மீனவர்கள் மாநாடு நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழா திடலை மீனவர் நலத்துறை ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்.
மீனவர் நலத்துறை ஆணையர் ஆய்வு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ந்தேதி ராமநாதபுரம் வருகிறார். அன்று கட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு மறுநாள் 18-ந் தேதி மண்டபம் முகாம் அருகில் உள்ள திடலில் அரசு சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மீனவர்களுக்கான மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
இதை தொடர்ந்து விழா முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி நேற்று காலை நேரில் ஆய்வு செய்தார். நடைபெற உள்ள மீனவர்கள் சங்க மாநாட்டில் முதல்-அமைச்சர் மீனவர்களை சந்தித்து கலந்துரையாடல் நடைபெற ஏதுவாக அரங்கம் அமைத்திட அறிவுரைகளை வழங்கி அதற்கான பணிகளை துரிதப்படுத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மீன் இறங்கு தளம் சீரமைக்க நடவடிக்கை
பின்னர் அவர் மண்டபம் மற்றும் குர்துகால் பகுதியில் மீன் இறங்குதளத்தை பார்வையிட்டு மீனவர்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டு அறிந்து கொண்டார்.
மேலும் மீனவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மீன் இறங்கு தளம் சீரமைக்க போதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மீனவர் நலத்துறை ஆணையர் மீனவர் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர்கள் காத்தவராயன், பிரபாவதி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, ராமேசுவரம் நகர்மன்ற தலைவர் நாசர்கான், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் கோபி, ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எம்.எல்.ஏ. உடன் மண்டபம் பேரூர் செயலாளர் அப்துல் ரகுமான் மறைக்காயர், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் நாகாச்சி ராஜீவ் காந்தி, மாவட்ட தொழிலாளர் அணி சாரா துணை அமைப்பாளர் சுகுமார் உள்பட தி.மு.க.நிர்வாகிகள் பலர் உடன் வந்தனர்.