< Back
மாநில செய்திகள்
வீடுகளில் குப்பை சேகரிக்கும் பணியை கமிஷனர் திடீர் ஆய்வு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

வீடுகளில் குப்பை சேகரிக்கும் பணியை கமிஷனர் திடீர் ஆய்வு

தினத்தந்தி
|
9 July 2022 4:26 PM GMT

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில், வீடுகளில் குப்பை சேகரிக்கும் பணியை கமிஷனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் வீடு, வீடாக குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகள் முன்பு முருகபவனம் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டன. அந்த குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாக குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது. இதனால் தற்போது வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அங்கு கொட்டப்படுவது இல்லை. அதற்கு மாறாக நகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உரப்பூங்கா அமைத்து மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது.

இதையொட்டி பொதுமக்கள் வீடுகளிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. இதேபோல் அனைத்து பகுதிகளிலும் தினமும் காலை 6 மணிக்கே குப்பை சேகரிக்கும்படி தூய்மை பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் நேற்று மவுன்ஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணிக்கு குப்பை சேகரிப்பு நடக்கிறதா? என்று திடீர் ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும் வீடுகளிலேயே குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்கும்படி பொதுமக்களிடம் அறிவுறுத்தினார். அதையடுத்து பழைய லாரிபேட்டை பகுதியில் இருக்கும் உரப்பூங்காவையும் ஆய்வு செய்தார். அங்கு காய்கறி கழிவுகள் உள்ளிட்ட மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணியையும் பார்வையிட்டார். அப்போது சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்