< Back
மாநில செய்திகள்
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை ஆணைய குழுவினர் ஆய்வு
அரியலூர்
மாநில செய்திகள்

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை ஆணைய குழுவினர் ஆய்வு

தினத்தந்தி
|
26 March 2023 12:01 AM IST

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை ஆணைய குழுவினர் ஆய்வு செய்தனர்.

மீன்சுருட்டி:

நீர்நிலைகளில் ஆய்வு

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே மேலணிக்குழி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் முத்துக்குமாரசாமி. இவர் மேலணிக்குழி பகுதியில் 32 ஏக்கர் பரப்பளவு கொண்ட சின்ன மிலட்டு ஏரி, பெரிய மிலட்டு ஏரி, ஈஸ்வரன் ஏரி, செட்டிகுளம் ஏரி ஆகிய 4 ஏரிகளிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இது குறித்து பதில் அளிக்க வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதாக கூறி வருவாய்த்துறை சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்று மீண்டும் ஐகோர்ட்டில் முத்துக்குமாரசாமி மனு தாக்கல் செய்தார். இது குறித்து விசாரிக்க நீதிபதி உத்தரவின்பேரில், விசாரணை ஆணைய குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து வக்கீலும், ஆணைய குழு தலைவருமான மதுப்பிள்ளை தலைமையிலான குழுவினர் நேற்று மேலணிக்குழி கிராம பகுதியில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த குழுவினர் 4 ஏரிகளையும் பார்வையிட்டனர்.

அதிகாரம் உள்ளவர்களால் தவறுகள்...

இதைத்தொடர்ந்து நிருபர்களிடம், மதுப்பிள்ளை கூறுகையில், 2010-ம் ஆண்டு இந்தியா முழுவதும் நீர்நிலைகளை காக்கும் பொருட்டு ஏரி, குட்டைகளை மீட்கும் விதமாக ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. விவசாயம் காக்கவும், நிலத்தடி நீர் மட்டம் காக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகாரின்பேரில், முதலில் ஏரி உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ள வந்தேன். நாட்டில் நடக்கும் தவறுகள் முழுவதும் அரசியல்வாதிகளாலன்றி, அதிகாரம் உள்ளவர்களால் நடக்கிறது.

வருவாய் துறை, காவல்துறை ஒழுங்காக இருந்தால் இது போன்ற ஏரி, குளம் மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு நடக்காது. ஒரு பட்டா வாங்க, வீட்டிற்கு மின் இணைப்பு வாங்குவதற்கு என 9 மாதம் அலைந்தேன். என்னை போன்ற படித்தவர்களுக்கே இந்த நிலை. இது போன்றவற்றால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதில் இது போன்ற சட்டம் உள்ளது என அதிகாரிகள் சொல்லி கொடுக்க வேண்டும். தற்போது எனது பணியை செய்துள்ளேன். இது குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின் நீதிமன்றம் இதற்கான பதிலை வழங்கும், என்று கூறினார்.

மேலும் செய்திகள்