வள்ளலார் குறித்த கருத்து: கவர்னர் ஆர்.என்.ரவிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
|வள்ளலார் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வள்ளலார் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார, பண்பாட்டு வரலாற்றைப் பற்றி தவறான கருத்துக்களை தொடர்ந்து கூறிவரும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, தற்போது ஒன்றை உளறிக் கொட்டியுள்ளார். தமிழ்நாட்டில் சாதிய சனாதன சமூக கட்டமைப்பை உடைக்கவும், அதன் கருத்தியலை தாக்கி அழிக்கவும் ஒலித்த முதன்மைக்குரல் "வள்ளலார்" அவர்களின் குரல் ஆகும்.
"சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட் பெரும் சோதி, என்றும் சாதியும், மதமும் சமயமும் வேண்டேன் சாத்திரக் குப்பையும் வேண்டேன்" எனவும் "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்" எனவும் முழங்கிவர்.
"அருட் பெருஞ் சோதி, தனிப்பெருங் கருணை" என தமிழ்நாட்டில் ஆன்மிகத்தில் சாதி, மத பேதமின்றி அனைவரையும் உள்ளடக்கிய புதிய தடம் பதித்தவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என அனைத்துயிர்களின் சமத்துவம் பேசியவர். இத்தனை சிறப்புக் கொண்ட "வள்ளலார்" அவர்களை "பார்ப்பனிய, சாதியத்தை உயர்த்தி பிடிக்கும் சனாதனத்தின் உச்சம்" என தமிழ்நாட்டு கவர்னர் கூறியதை என்னவென்று சொல்வது? திட்டமிட்டு இப்படி பொய்யுரைகளை பரப்பும் தமிழ்நாட்டு கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.